ஒரு அதிசயமான சரித்திர சம்பவம் குறித்து படித்தேன்…
1892-ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்
கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கான
கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.
அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபல
இசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம்
வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால்,
படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவு
செய்தனர்.
அதற்காக, உலகப் புகழ்பெற்ற, போலந்து நாட்டைச் சேர்ந்த
பியானோ இசைக் கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை
சந்தித்து, தேதி கேட்டனர்.
அவரது மேனேஜரோ, ‘சார் வருவார்… ஆனால், நீங்கள்
அவருக்கு, 2,000 டாலர் தர வேண்டும்…’ என்று கூற,
இருவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.
பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப்பெரிய வெற்றி
என்பதால், அந்த நிகழ்ச்சியை, ‘சூப்பர் ஹிட்’டாக்க முடிவு
செய்து, அல்லும் பகலும் நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு
உழைத்தனர்.
நிகழ்ச்சிக்கான நாளன்று நகரில் வேறு சில முக்கிய
நிகழ்வுகள் இருந்தபடியால், எதிர்பார்த்தபடி டிக்கெட்கள்
விற்பனையாகவில்லை.
வேறு வழியின்றி, மனதை தேற்றிக்கொண்டு, பேட்ரெவ்ஸ்கியை
சந்தித்து, நடந்ததை கூறி, ‘நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம்…’
என்றனர். ஆனால், பேட்ரெவ்ஸ்கி மறுத்து விட்டார்.
பணத்தைப்பற்றி கவலைப்படாமல், தான் நிச்சயமாக நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்தார்.
ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின், அவரை சந்தித்த
இரு மாணவர்களும், அவரிடம், 1,600 டாலர் கொடுத்து,
‘இதுதான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு,
பின் தேதியிட்டு, ‘செக்’ கொடுத்து விடுகிறோம். கூடிய
சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம்.
பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்…’ என்று,
பணத்தையும், காசோலையையும் கொடுத்தனர்.
அவரோ, அந்த காசோலையை கிழித்து போட்டு, அவர்கள்
கொடுத்த தொகையையும் அவர்களிடமே கொடுத்தார்.
‘நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம்.
அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்து,
உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்…’ என்றார்.
மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு வாடகை
கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள்
சிரமப்படுவதை அறிந்த பேட்ரெவ்ஸ்கி, அந்த
தொகையையும் செலுத்தினார். பல ஆண்டுகள் சென்றன.
காலப்போக்கில், தனது நாட்டில், அரசியலிலும் ஈடுபட்டு,
மேலும் புகழின் உச்சிக்கு சென்று, ஒரு கட்டத்தில்,
போலந்து நாட்டின் பிரதமர் ஆனார் பேட்ரெவ்ஸ்கி.
அப்போது, முதல் உலகப் போர் நடந்து, முடிந்து –
துரதிர்ஷ்டவசமாக, போலந்து நாடு, போரின் பிடியில்
சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வந்த
தருவாயில், மக்கள் அனைத்தையும் இழந்து, வறுமையில்
உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.
நிலைமையை எப்படி சமாளிப்பது, பசியோடு இருக்கும்
தன் நாட்டு மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது…
என்றி வழியறியாமல் தவித்தார், பேட்ரெவ்ஸ்கி.
அப்போது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ,
உருவான அமெரிக்காவின், ஆபத்துக்கால உதவிக்குழுவான,
‘அரா’ என்ற அமைப்பை அணுகினார். அதன் தலைவராக
இருந்தவர், ஹெர்பெர்ட் ஹூவர். இவர் பின்னாளில்,
அமெரிக்காவின், 31-வது ஜனாதிபதியானார்.
பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து,
அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான டன் உணவு
தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் போலந்து
நாட்டிற்கு அனுப்பப்பட்டன. பேரழிவிலிருந்தும்
பஞ்சத்திலிருந்தும் போலந்து மக்கள் தப்பினர். நிம்மதி
பெருமூச்சு விட்டார், பேட்ரெவ்ஸ்கி.
கேட்டவுடன், உதவி செய்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக,
ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து, கண்கள்
பனிக்க நன்றி தெரிவித்தார், பேட்ரெவ்ஸ்கி.
‘நோ… நோ… மிஸ்டர் பிரசிடெண்ட். நீங்கள் நன்றி
சொல்லக் கூடாது. நீங்கள் முன்பு எங்களுக்கு செய்த உதவிக்கு
தான், நான் இப்போது பிரதியுபகாரம் செய்துள்ளேன்.
‘உங்களுக்கு நினைவிருக்கிறதா… 25 ஆண்டுகளுக்கு முன்,
கல்லுாரி மாணவர்கள் இருவரின் கல்வி கட்டணத்தை
கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக் கொடுத்து
உதவினீர்கள் அல்லவா …? அந்த மாணவர்களில் ஒருவன்
தான் நான்…’ என்றார், ஹெர்பெர்ட் ஹூவர்.
கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக் கொண்டார்,
பேட்ரெவ்ஸ்கி.
காலம் எப்போது, யாரை, எங்கு வைக்கும் என்று
யாரால் கணிக்க முடியும் …? எப்போதோ யாருக்கோ செய்கின்ற
உதவி, பிற்காலத்தில் எப்படியோ, எந்த விதத்திலோ
பயனளிக்கும் அற்புதம்…
இயற்கையின் நியதி – ஒன்றை உறுதி செய்கிறது….
இங்கே நாம் எதை விதைக்கிறோமோ, அதையே
பின்னர் – பன்மடங்கு அதிகமாக அறுவடை செய்கிறோம்.
விதைத்தவன் மறந்து விட்டாலும், உறங்கி விட்டாலும் –
அவன் விதைத்த விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
என்றாவது ஒரு நாள் -பலன் தராமல் விடுவதில்லை;
Leave a Reply