அக்பர் – பீர்பால் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அக்பர் குழந்தையாக இருந்தபோது தன் தாயைத்தவிர,
வேறொரு பெண்ணிடமும் பாலருந்தி வளர்ந்தார்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு.
அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்த
அன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார்.
ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்து
எல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்.
ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
‘சக்ரவரத்திக்கு என் அன்னைதான் பால் கொடுத்தார்.
அவர் எனக்குக் கடமைப்பட்டவர். ஒருவகையில் அவர் எனக்கு
சகோதரர் முறை. ஏதாவது கேட்டால் அவரால் மறுக்க முடியாது’.
இந்த எண்ணம் தோன்றியதால் அவர் அக்பரைக் காண வந்தார்.
அக்பரும் அவரை வரவேற்று மரியாதை செய்து, அனைவருக்கும்
தன் சகோதரர் என்று அறிமுகப்படுத்தி அரண்மனையில்
தங்க வைத்தார். அவரும் அரச உடைகள் அணிந்து பல
கூட்டங்களில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு எதுவுமே
புரியவில்லை.
சில வாரங்கள் போயின. அவருக்கு இன்னொன்றும் தோன்றியது.
என்னைச் சுற்றி நல்லவர்கள் யாரும் இல்லாததால்தான்
எனக்கு சிரமங்கள் வந்தன. அக்பரைச் சுற்றி அருமையான
மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் மேலாக பீர்பால்
இருக்கிறார். அக்பர் சிறந்து விளங்க இதுதான் காரணம்.
பீர்பால் போல் ஒருவர் உடனிருந்தால் நானும் சிறந்து
விளங்குவேன் என்று நினைத்தார். அக்பரிடம் சென்று,
‘உங்களுடன் பீர்பால் இருப்பதால் நீங்கள் சிறந்து
விளங்குகிறீர்கள். உங்களுடன் பலர் இருக்கிறார்கள். எனவே
என்னுடன் பீர்பாலை அனுப்பிவையுங்கள்’ என்று கேட்டார்.
அவரைத் தனது மூத்த சகோதரராக அக்பர் கருதியதால் எதுவும்
மறுத்துச் சொல்ல இயலவில்லை. எனவே அக்பர், ‘நீங்கள்
பீர்பாலை அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னதோடு
மாலையில் அவையிலும் அதனை அறிவித்தார். ஒரு
முட்டாளோடு போக நேர்வதை உணர்ந்த பீர்பால், “உங்கள்
அண்ணனுக்கு அறிவார்ந்த துணை அவசியம்தான். எனக்கு
ஒரு யோசனை. அவரோடு என் அண்ணனை அனுப்பி
வைக்கிறேன் என்றார்”.
பீர்பால் இவ்வளவு அற்புதமான மனிதராக இருந்தால்,
அவரது சகோதரன் இன்னும் அற்புதமானவராக அல்லவா
இருப்பார் என்று கருதிய அக்பரின் அண்ணன் அதற்குச்
சம்மதித்தார். அக்பருக்கும் மகிழ்ச்சி.
மறுநாள் வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடானது.
பீர்பால், ஒரு காளை மாட்டுடன் வந்தார்.
ஆச்சரியமடைந்த அக்பரிடம் சொன்னார். ‘இதுதான்
என் அண்ணன், நாங்கள் இருவரும் ஒரே தாயிடம்தான்
பாலருந்தினோம்’ என்று.
யாருக்கு எங்கே இடம் கொடுக்க வேண்டும் – புரிந்தது அக்பருக்கு….!!!
Leave a Reply