மலேசியாவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.என்ஜி யென் யென் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் நேற்று கூறியதாவது:
மலேசியாவுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், ஆகிய நகரங்களில் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் மலேசியாவுக்கு வருகின்றனர். மேலும் 2000ல் 1,32,127 இருந்த இந்திய பயணிகளின் எண்ணிக்கை 2008ல் 5,50,738 ஆக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டில் 6லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் ரூ.1900 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மலேசியாவில் பல்வேறு இன, மத பண்பாட்டு அடையாளங்களுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்தத்தில் ஆசியாவின் அடையாளமாக குட்டி ஆசியாவாக மலேசியா உள்ளது.
தூய்மையான கடற்கரைகள், தெளிவான கடல்நீர், அழகிய வனப்பகுதிகள், நவீன சந்தை மாளிகைகள் என சுற்றுலா பயணிகளை கவரும் அத்தனை அம்சங்களும் உள்ளன.
“ஒரு மலேசியா முடிவில்லா அனுபவங்கள்: ஒரே கட்டணத்தில்” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் மலேசியா வந்து போக விமான கட்டணம், 4 பகல், 3 இரவு தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு ரூ.17,000 செலுத்தினால் போதும். விசா கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் விசா வழங்க தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டினரும் மலேசியாவில் வீடுகளை வாங்கலாம். வீடுகள் ரூ.32 லட்சத்துக்கு கிடைக்கும். இப்படி வீடு வாங்குபவர்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம். இந்தியா, மலேசியா இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கை இருமடங்காக ஆக்கப்படும்.
மலேசிய நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் உள்ளது. எந்த நிறுவனங்களில் குறைக்க வேண்டும், எத்தனை நிறுவனங்களில் குறைக்க வேண்டாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். எங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவே இந்த நடவடிக்கை. இவ்வாறு யென்யென் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது சுற்றுலா துறை தலைமை இயக்குனர் மீர்சா முகமப்பது தாய்ப், இயக்குனர்கள் பெரியசாமி மனோகரன், நோரன் உஜங், இந்தியாவுக்கான மலேசியா தூதர் டான் செங் சங், சென்னையிலுள்ள மலேசிய தூதரக அதிகாரி அன்வர் கசமன் ஆகியோர் பங்கேற்றனர்.
Leave a Reply