மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் ஆட்சி மன்ற குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

tblkutramnews_13441103697சென்னை: மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தை, ஆட்சிமன்றக் குழு செயலரிடம் ஒப்படைக்க வேண்டும் என, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரி உள்ளது. இதன் முதல்வராக சின்னராஜ் ஜோசப் ஜெய்குமார் உள்ளார். வெளிநாடு செல்வதற்காக, விடுமுறை வேண்டி விண்ணப்பித்தார். பின், அவரது பயணம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதில், “சமீபத்திய நிகழ்வுகளினால்’ என குறிப்பிடப்பட்டது. இதற்கிடையில், கல்லூரி முதல்வர் விடுமுறையில் செல்லும்பட்சத்தில், துணை முதல்வராக இருந்த ஜார்ஜ் செல்வகுமாரை முதல்வர் மற்றும் செயலர் (பொறுப்பு) அன அழைத்து, ஆட்சி மன்றக் குழுவின் தலைவரான பிஷப்,கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் எழுதினார்.

கல்லூரி முதல்வராக பொறுப்பேற்கும்படி, ஜார்ஜ் செல்வகுமாரிடம் கோரப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி பிரச்னை உருவானது. ஜார்ஜ் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து, முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெய்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, பொதுக்குழுவை ஜார்ஜ் செல்வகுமார் கூட்டினார். அதில், முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெய்குமாரை சஸ்பெண்ட் செய்தும், ஜார்ஜ் செல்வகுமாரை முதல்வர் மற்றும் செயலராக (பொறுப்பு) நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் செல்லாது எனக் கூறி, முதல்வராக சின்னராஜ் தொடர்ந்து செயல்பட்டார்.

அவர் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு பொதுக்குழுவைக் கூட்டினார். அதில், ஜார்ஜ் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்ததை உறுதி செய்தும், புதிய துணை முதல்வராக அன்புதுரையை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை முதல்வர் பதவியில் இருந்து, ஜார்ஜ் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்தது குறித்து கல்லூரி கல்வி இயக்குனருக்கு முதல்வர் சின்னராஜ் தகவல் அனுப்பினார். இதையடுத்து, ஜார்ஜ் செல்வகுமாரை துணை முதல்வராக நியமித்தும், சின்னராஜ் ஜோசப் ஜெயகுமாரை முதல்வர் மற்றும் செயலராக தொடரவும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

கல்லூரி கல்வி இயக்குனரின் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் பிஷப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், ஜார்ஜ் செல்வகுமாரும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், சின்னராஜ் ஜோசப் ஜெயகுமார், கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சின்னராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. முதல்வர் பதவியில் இருந்து சின்னராஜ் ஜோசப் ஜெயகுமாரை நீக்கியது சரியல்ல என்றும், அதுகுறித்த தீர்மானத்துக்கு சிவில் கோர்ட் மூலம் நிவாரனம் பெறலாம் என்றும் உத்தரவிட்டது.

அதுவரை, முதல்வர் சின்னராஜ் நியமித்த துணை முதல்வர் அன்புதுரை, முதல்வராக பணியாற்றலாம் என்றும் நிர்வாகத்தை, கல்லூரி கல்வி இணை இயக்குனர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஜார்ஜ் செல்வகுமாரின் மனு, விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் பிஷப் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஜார்ஜ் செல்வகுமார், பிஷப், சின்னராஜ் ஜோசப் ஜெயகுமார் மற்றும் சிலர் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்ரமணியன், அரிபரந்தாமன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: அனைத்து சட்டப்பூர்வமான விஷயங்களிலும், துணை விதிகளின்படி கல்லூரி முதல்வர் தான் அதிகாரப்பூர்வ பிரதிநிதி. எனவே, ஆட்சிமன்றக் குழு எடுக்கும் எந்த நடவடிக்கையையும், துணை விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்டவர் தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். அதன்படி, கல்லூரி முதல்வரை தான் துணை விதி அனுமதிக்கிறது. எனவே, பிஷப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

கல்லூரி முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயகுமார், விடுமுறையில் செல்லவில்லை. எனவே, அந்தப் பதவியில் ஜார்ஜ் செல்வகுமார் நியமிக்கப்பட்டது நடைமுறைக்கு வராது. முதல்வர் இல்லையென்றாலோ அல்லது அவரால் செயல்பட இயலாமல் போனாலோ, அவரது பணிகளை துணை முதல்வர் ஆற்றலாம். எனவே, இவரது மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என தனி நீதிபதி கூறியுள்ளார். கல்லூரி கல்வி இயக்குனரின் உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர அவருக்கு உரிமையுள்ளது.

தனிப்பட்ட முறையிலோ, கவுன்சில் அனுமதி பெற்றோ மனு தாக்கல் செய்யவில்லை. எனவே அவரது மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறியுள்ளார். ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்கிற போது, கல்லூரி கல்வி இயக்குனரின் உத்தரவு செல்லுமா என்கிற கேள்விக்குள் போக வேண்டியதில்லை. எனவே, நிர்வாகத்தை செயலரிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஒப்படைக்க வேண்டும். முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயகுமாரை நீக்கியது சட்டவிரோதமானது. கல்லூரி முதல்வராக தொடர அவருக்கு உரிமை உள்ளது.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *