ஹைதராபாத்: இந்திய மாணவர்களுக்காக, ரூ. 500க்குள் விலை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முயல வேண்டும் என்று மத்திய உயர்கல்வித்துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த இ-2009 என்ற நிகழ்ச்சியில், புரந்தரேஸ்வரி பேசுகையில் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 500 ரூபாய்க்கு லேப்டாப் என்பது சவாலான ஒன்றுதான். ஆனால் நம்மிடம் திறமை உள்ளது. சவாலை சந்தித்து வெல்லும் திறமை உள்ளது. ரத்தன் டாடா ரூ. 1 லட்சத்திற்கு காரை உருவாக்குவார் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?
நாம் அனைவரும் இணைந்து குறைந்த விலையிலான லேப்டாப்களை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். கம்ப்யூட்டர் இருந்தால் கரன்ட் இருப்பதில்லை. அது ஒரு பிரச்சினை. அதையும் சரி செய்ய வேண்டும்.
நம்முடைய மாணவ, மாணவியருக்கு இவ்வளவு குறைந்த விலையில் லேப்டாப்கள் கிடைத்தால், கல்வித் தரம் மேலும் உயரும். தொழில்நுட்பத்தை நமது குழந்தைகளுக்கு வெகு அருகில் கொண்டு வந்து விடலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும் லேப்டாப் தர வேண்டும் என சிலர் சொல்கின்றனர். ஆனால் அப்படி செய்வதாக இருந்தால், ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் குறைந்தது 5000 முதல் 10,000 வரை மானியமாக செலவிட நேரிடும். ஆனால் தற்போதைய நிலையில் அவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது இயலாத காரியம்.
அதேபோல அவரவர் தாய் மொழியில் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்த வேண்டும். அது இன்னொரு சவால்.
ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். தொழில்நுட்பத்தைக் கண்டு அவர்கள் அஞ்சக் கூடாது. நம்மிடம் உள்ள இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வகுப்பறையில் கம்ப்யூட்டர்கள் முன்பு அமரவே அவர்கள் தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள். எங்கே தொழில்நுட்பம் நமது வேலையைப் பறித்து விடுமோ என அஞ்சுகிறார்கள். அது தேவையில்லை. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பணியை நாம்தான் செய்ய வேண்டும் என்றார் புரந்தரேஸ்வரி.
Leave a Reply