அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 165 ஏவுகணைகளில் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் மாற்றம் செய்துள்ளது. இந்தியாவை குறி வைத்து இவை அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படைக்கு 1985 மற்றும் 1988ம் ஆண்டுகளில் அமெரிக்கா 165 ஹர்பூன் ஏவுகணைகளை விற்பனை செய்தது. ஒப்பந்தப்படி கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தத்தான் இவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த ஏவுகணைகளை இந்தியாவை குறி வைத்து தரை வழியாக தாக்குதல் நடத்தும் வகையில் பாகிஸ்தான் மாற்றியமைத்து உள்ளது. இந்த ஏவுகணைகள் இந்தியாவை குறிவைத்து நிறுவப்பட்டுள்ளன. இது போல் அமெரிக்க தயாரிப்பான பி-3சி போர் விமானங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை, அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி, இந்தியாவுக்கு எதிராக போர் ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்படுவதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார்.
பாகிஸ்தானுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 7.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதற்கு ஒப்புதல் வழங்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ஒபாமா கேட்டுள்ளார். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் விதிமீறல் பற்றிய செய்தி வெளியாகியிருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் மறுப்பு:பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், இஸ்லாமாபாத்தில் நேற்று கூறுகையில், “அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என்றார்.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “ஏவுகணைகளை நவீனப்படுத்தி வடகொரியா பாணியில் மாற்றி அமைத்து இருக்கிறோம்” என்று பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்த செயலுக்கு அந்நாட்டு பிரதமர் கிலானியிடம் ஜூலை மாதமே அமெரிக்க அரசு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து விட்டதாக அந்த பத்திரிகை செய்தி மேலும் கூறுகிறது.
Leave a Reply