விழுப்புரம் : “காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் 51 வகையான நோய்கள் பட்டியலை, ஒவ்வொரு ஊராட்சியிலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என, அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் ஏழை மக்கள் பயனடையும் காப்பீட்டு திட்டத்தை, முதல்வர் கருணாநிதி செயல்படுத்தியுள்ளார். முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில், 51 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலை ஒவ்வொரு ஊராட்சி தலைவரும், ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும். இத்திட்டத்தில், மக்கள் பயனடைவதற்காக வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதில் சேராதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய்குள் வருமானம் பெறுபவராக இருந்தால், போதும்.
வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்றால், இத்திட்டத்தில் சேருவதற்கான அடையாள அட்டையை பெறலாம். மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக, அலுவலர்கள் யாரும் பொது மக்களிடம் பணம் வாங்கக் கூடாது. அவர்கள் பணம் வாங்கினால், எனது (அமைச்சரின்) உதவியாளர் 98423- 40044 என்ற மொபைல் போன் எண்ணிலும், கலெக்டருக்கும் தகவல் தெரிவியுங்கள். உடனடியாக, அந்த அலுவலரை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
Leave a Reply