புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களில் 21 பேரின் வருகை நாட்கள் குறைவானதால் அவர்களை தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் வருகை நாட்கள் குறைவானதால் 2-வது செமஸ்டர் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதை எதிர்த்து மோகன்ராஜ், பாரதிதாசன் ஆகிய இரு மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் கே.செல்வராஜ், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது என்றும், வருகை நாட்கள் 75 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் அப்படிப்பட்ட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்ததாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 21 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும், ஆனால் இந்த 2 மாணவர்கள் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வருகை நாட்கள் குறைவாக இருந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காதது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
Leave a Reply