அரசியலில் முகவரி தேடும் சாமி புகாருக்கு விஜயகாந்த் காட்டம்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_34601992369சென்னை:”விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணம் பெறவில்லை’ என, சுப்ரமணியசாமி புகாருக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:”

தமிழக அரசியல் பிரமுகர்களுக்கு விடுதலைப் புலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது; அந்தப் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றுள்ளது; இந்த விவரங்களை இலங்கை அரசு கொடுத்துள்ளது’ என்று சுப்ரமணியசாமி குறிப்பிட் டுள்ளார்.யாரைப் பற்றியாவது ஏதாவது சொல்லி, தானும் அரசியலில் இருப்பதாக மக்களிடம் காட்டிக்கொள்வதற்காக அறிக்கை விடுபவர் சாமி.

அவர் கூறியுள்ளது போல், நான் கனடாவிற்கு சென்றபோதோ, தமிழகத்தில் இருந்த போதோ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை. பணம் வாங்கிய பிறகு தான் புலிகளுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தேன் என சாமி குற்றஞ்சாட்டுகிறார். ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்பே என் மூத்த மகனுக்கு, பிரபாகரன் என்ற பெயர் சூட்டியுள்ளேன்.

உலக நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக இலங்கை அரசு நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துவரும் நிலையில், இலங்கை அரசின் சார்பில் தகவல்களை தர முன்வந்துள்ள சுப்ரமணியசாமியை இலங்கை அரசின் கைக்கூலியென்று தமிழ் உலகம் தூற்றுமே என நினைக்கும்போது, அவர் நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறேன்.

தமிழின துரோகி என்ற பட்டத்தோடு, இங்கு அவர் அரசியல் நடத்த முடியுமா என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும். ராஜிவ் கொலை சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்டுள்ள இந்தியர்களைக் கண்டறிய, புலிகள் இயக்கத்தின் தலைவர் குமரன் பத்மநாதனிடம் மத்திய உளவுத்துறை விசாரிக்கவுள்ளது.

இந்த விசாரணையில் பல முக்கியத் தலைகள் உருளும் என்று தெரிகிறது. அதில், சுப்ரமணியசாமியின் பெயர் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டால், அதுவே அவருக்கு போதுமானது. யார் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்புவது சாமிக்கு வழக்கமாக இருக்கலாம். நான் எதையும் ஆராயாமல் நம்புவதில்லை.

என்னை விமர்சிப்பது தான் அரசியல் என்று, 70 ஆண்டுகால அரசியல்வாதியே எண்ணுகிற போது, அரசியலில் முகவரி தேடும் சுப்ரமணியசாமி அறிக்கை விடுவதில் ஆச்சரியமில்லை.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *