வாஷிங்டன்:”என்னை மிகவும் கவர்ந்த தலைவர் காந்தியடிகள். அவருடன் சேர்ந்து விருந்து சாப்பிட எனக்கு விருப்பம். எனக்கு பிடித்த அந்த தலைவரின் படத்தை அலுவலகத்தில் மாட்டி வைத்துள்ளேன்’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகர பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.
அங்கு அவர், மாணவ, மாணவியருடன் உரையாடினார்.ஒரு மாணவி, “உங்களுக்கு யாருடன் சேர்ந்து விருந்து சாப்பிட விருப்பம்? அந்த நபர் இறந்து போனவராகவும் இருக்கலாம், உயிரோடு இருப்பவராகவும் இருக்கலாம்’ என கேட்டாள்.பலமாக சிரித்த ஒபாமா, சிறிய யோசனைக்குப் பின், “எனக்கு காந்தியடிகளுடன் தான் விருந்து சாப்பிட பிடிக்கும்.
ஆனால், அந்த தலைவர் மிகவும் குறைவாக சாப்பிடக் கூடியவர். அவரை நான் முன் மாதிரியாக பின்பற்றுகிறேன். மார்டின் லூதர் கிங்குக்கும், காந்திஜி தான் பிடித்த தலைவர். காந்தியின் அகிம்சை முறை தான், அமெரிக்க சிவில் உரிமை போராட்டத்தின் போதும் பின்பற்றப் பட்டது.பணத்தின் மூலமோ, அதிகாரத்தின் மூலமோ மாற்றத்தை ஏற்படுத்தாமல், அகிம்சை கொள்கை மூலமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் காந்திஜி. இதுபோன்ற தலைவர்களை தான், நான் பெரிதும் மதிக்கிறேன். இவரது பாணியை தான் பின்பற்ற விரும்புகிறேன்.
மக்கள் சக்தியை கொண்டே, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அந்த தலைவரை மதிக்கிறேன். காந்தி மீது கொண்ட காதலால், அவர் படத்தை என்னுடைய செனட் அலுவலகத்தில் மாட்டி வைத்தேன்.இவ்வாறு ஒபாமா கூறினார்.
Leave a Reply