சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்பை துவக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்கு அடுத்த கல்வியாண்டில் இருந்து, இதர அனைத்து வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டம் மற்றும் பயிற்றுமொழி இரண்டுமே ஆங்கிலத்தில் இருக்கிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் கிடையாது. மேலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. ஆறாம் வகுப்பில் இருந்து தான் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், “அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீரான கல்வி அளிக்கப்படும்’ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. “பயிற்று மொழிகளில் தற்போதுள்ள நிலையே தொடரும்’ என்று அறிவிக்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுமா, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருக்கிறது. நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முழுமையான ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில், ஆங்கில வழி பிரிவில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரையிலான மாணவியர் சேர்க்கையைப் பார்த்தால், ஒவ்வொரு வகுப் பிலும், தமிழ்வழி சேர்க்கையை விட ஆங்கில வழி சேர்க்கையில் படிக்கும் மாணவியரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.
இதேபோல, பல அரசு பள்ளிகளில் ஆங்கில வழி படிப்பிற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. எனவே, அரசு பள்ளிகளிலும் முழுமையான அளவில் ஆங்கில வழி வகுப்புகளை துவக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமச்சீரான கல்வி என்று வரும் போது, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., முதல் ஆங்கில வழி வகுப்புகளை துவக்குவது தான் நியாயமாக இருக்கும் என்றும் பெற்றோர் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆரம்பப் பள்ளிகளில் ஆங் கில வழி வகுப்புகளை துவக்குவது தொடர்பாக இதுவரை எவ்விதமான முடிவும் எடுக்கவில்லை’ என்றனர்.
Leave a Reply