தமிழக மாவட்டங்களுக்கான ரேங்கிங் – மதுரைக்கு 23வது இடம் – அரசு அதிருப்தி

22-madurai200சென்னை: தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ராமநாதபுரத்திற்கு 22வது ரேங்க் தந்துள்ளனர். இந்த தர வரிசைப் பட்டியலுக்கு தமிழக அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தூதரகத்தின் நிதியுதுவியுடன் நடத்தப்பட்டு வரும் நிதி மேலாண்மை மற்றும் ஆய்வுக் கழகம்தான் இந்த சர்வேயை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி பொருளாதார ஆளுமை இன்டெக்ஸ் – தமிழ்நாடு என்ற பெயரில் இதை வெளியிட அது திட்டமிட்டிருந்தது. ஆனால் அது பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

இந்த கழகத்தின் சர்வேயின்படி தமிழகத்திலேயே நம்பர் ஒன் மாவட்டமாக நீலகிரி தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது இடம் நாமக்கல்லுக்கும், 3வது இடம் கன்னியாகுமரிக்கும் தரப்பட்டுள்ளது.

கடைசி இடத்தில் திண்டுக்கல் உள்ளது. சென்னை ஏற்கனவே தொழில் மையமாக இருப்பதால் இந்த ஆய்விலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

அரியலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகியவை அவற்றின் தாய் மாவட்டங்களான பெரம்பலூர், கோவை, தர்மபுரியுடன் இணைத்து கணக்கிடப்பட்டுள்ளன.

மதுரைக்கு 23வது இடமாம்…

இந்த அறிக்கையில், மதுரைக்கு 23வது இடம் கொடுத்துள்ளனர். அதேசமயம் ராமநாதபுரத்திற்கு 22வது இடத்தைக் கொடுத்துள்ளனர். அதாவது மதுரையை விட ராமநாதபுரத்தில் வாழ்நிலையும், வர்த்தக சூழ்நிலையும் சிறப்பாக உள்ளதாம்.

திருச்சி 16வது இடத்திலும், திருநெல்வேலி 17வது இடத்திலும் உள்ளன.

மத்திய ரசாயானத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காகவே மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல தகவல்கள் தமிழக அரசால் கொடுக்கப்பட்டவைதான். இருப்பினும் இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறை மற்றும் கணக்கீடுகளுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் கூறுகையில், இந்த ஆய்வில் உள்ள பல முறைகள் தவறானவயாக உள்ளன. மதுரையை விட எப்படி ராமநாதபுரம் சிறந்த வர்த்தக சூழ்நிலையைக் கொண்டதாக இருக்க முடியும்? இந்த ஆய்வை மாணவர்கள் நடத்தியிருப்பதாக நான் அறிகிறேன் என்றார்.

ஆனால் உரிய நிபுணர்களைக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கழகத்தின் திட்டத் தலைவர் சோமசுந்தரம் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *