சென்னை: “முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்திகளைக் கண்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள, “கேள்வி – பதில்’ அறிக்கை:
இலங்கைப் பிரச்னை குறித்து தாங்கள் எழுதிய கடிதத்தை ஒட்டி, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளதே?
இலங்கைப் பிரச்னையில், தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது நமக்கு திருப்தியை அளிக்கிறது. பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொள்ளாமல், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பிரதமரையும், சோனியாவையும் நேரில் சந்தித்து நமது கோரிக்கையை விளக்க உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த அளவிற்கு இலங்கைத் தமிழர் பிரச்னையில் செயல்பட்டு வந்தபோதிலும், இங்கேயுள்ள ஒரு சிலர், திரும்பத் திரும்ப மத்திய, மாநில அரசுகளைக் குறை சொல்லிக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டுள்ளனர்.
சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென திருவாரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு கொடுத்துள்ளனரே?
அவருக்கு அறிக்கை விட வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை போலும். தஞ்சை மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் அலுவலகத்தில் இருந்தே கலந்து பேசி, அவர்களின் தேவை அறிந்து அதற் கேற்ப, மேட்டூர் அணையில் இருந்து இதுவரை வழங்கப்பட்டு வந்த தண்ணீரை விட கூடுதலாக, அதாவது 18 ஆயிரம் கன அடி என்பதை 20 ஆயிரம் கன அடி என உயர்த்தி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் அதிகாரிகள், டெல்டா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, டெல்டா விவசாயிகளுக்கு குறை நேராமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சியிலும் இதுபோலவே முறை வைத்து தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நானும் இருக்கிறேன் என காட்டிக்கொள்ள ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு, கட்சியினரைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
உதிரிபாகங்கள் இன்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் முடங்கிக் கிடப்பதாக செய்தி வந்துள்ளதே?
விரைவு பஸ்கள் மொத்தம் 1,000 ஓடிக் கொண்டிருக்கின்றன. அதில் 56 முடங்கிக் கிடப்பதாக கூறப்பட்டுள்ளது. தி.மு.க., அரசு மூன்று ஆண்டுகளில் புதிய பஸ்கள் வாங்க 417 கோடி ரூபாயும், குறுகிய காலக் கடனாக 372 கோடி ரூபாயும், பஸ் நிலைய மேம்பாட்டிற்கு 11 கோடி ரூபாயும், பஸ் கழுவும் இயந்திரம் வாங்க எட்டு கோடி ரூபாயும், பண இழப்பை ஈடுகட்ட குறுகிய காலக் கடனாக 163 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9,248 புதிய பஸ்கள் வாங்கி இயங்கி வருகின்றன. வரும் நிதியாண்டில் மேலும் 3,500 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை முறியடிக்க தமிழக அரசு தவறி விட்டது என்ற குற்றச்சாட்டு பற்றி?
கேரள அரசு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த கடிதமும் இல்லை. உண்மையில் இப்பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அங்கே ஒரு முடிவு தெரியும் வரை, இதுபோன்று வெளிவரும் செய்திகளைக் கொண்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. எனினும், மத்திய அரசிடம் இப்பிரச்னை குறித்து தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Leave a Reply