தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி

posted in: மற்றவை | 0

01_001கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. முல்லைபெரியாறு அணையை ஒட்டி பசுமை மிகுந்து காணப்படும் இப்பகுதியை ரசிக்க வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் அணையை ஒட்டியுள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர்.

படகு சவாரியின் போது, கரையோரம் உள்ள அடர்ந்த காட்டில் யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக வருவதை கண்டு ரசிக்கலாம். இங்கு, கேரள வனத்துறைக்கு சொந்தமான 4 படகுகளும், கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 4 படகுகளும் இயக்கப்படு கின்றன. அவை 2 அடுக்குகள் கொண்ட பெரிய படகுகள்.

தற்போது கேரளாவில் மழை பெய்வதால் ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாகவே தேக்கடிக்கும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நேற்று மாலை 4.00மணிக்கு கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ‘ஜலகன்யகா’ எனும் 2 அடுக்கு படகில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 83 சுற்றுலா பயணிகள் சவாரி சென்றனர். அவர்களில் சுமார் 60 பேர், கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள். பெரியாறு அணை அருகே சென்று விட்டு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மணக்காவளை எனும் ஆழமான பகுதியில் படகு வரும்போது கரையோரம் யானை கூட்டம் வந்துள்ளது. அதை பார்ப்பதற்காக படகில் இருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மள,மளவென ஒரே பகுதியில் குவிந்தனர். இதில் நிலைகுலைந்த படகு அந்த பக்கமாக கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர்.

மற்றொரு படகில் வந்தவர்கள் இதை கவனித்து அலறினர். உடனடியாக, கரையில் இருப்பவர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து கேரள சுற்றுலாத்துறை, வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்ற படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு வரை 32 உடல்கள் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். எனினும், இருட்டி விட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை நடந்தது.

இறந்தவர்களின் அடையாளம் உடனடியாக தெரியவில்லை. உடல்கள் குமுளி அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக கொச்சியில் இருந்து கடற்படை மற்றும் மருத்துவ குழுவினர் 40 பேர் ஹெலிகாப்டர் மற்றும் வாகனங்களில் தேக்கடிக்கு விரைந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள அமைச்சர்கள் கோடியேரி பால கிருஷ்ணன், பிரேமச்சந்திரன், கே.பி.ராஜேந்திரன், பினோய் விஸ்வம் மற்றும் உயர் அதிகாரிகளும் தேக்கடிக்கு விரைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து 3 ஆம்புலன்சுகள் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டன.

கவிழ்ந்தது முதல்முறை: 2 மாதங்களுக்கு முன்புதான் கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 அடுக்கு கொண்ட 2 புதிய படகுகள் விடப்பட்டன. அதில் ‘ஜலகன்யகா’ எனும் படகுதான் விபத்துக்குள்ளா கியுள்ளது. படகில் கோளாறு இருந்ததா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேக்கடியில் 1979 முதல் படகு போக்குவரத்து நடக்கிறது. இதன் மூலம் கேரள சுற்றுலாத் துறைக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. முதன்முறையாக இப்போதுதான் இது போல் படகு கவிழ்ந்து சோகம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *