சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் நூலிழையில் விபத்திலிருந்து தப்பியது

posted in: மற்றவை | 0

ap_chandrababu_naiduஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.


வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை காணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 7 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கன மழை கொட்டுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 85 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை. நிவாரண, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழையால் வெகுவாக பாதிக்கப்பட்ட கர்னூல், மெகபூப் நகர் மாவட்டங்களை தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

துங்கபத்ரா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மந்த்ராலயம் குருராகவேந்திரர் கோயில் மூழ்கியது. இங்கு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள எமிக்கனூர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. அப்போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதுவது போல சென்றது. இதை பார்த்து மக்கள் சத்தம் போட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆபத்தை உணர்ந்த பைலட்கள் சட்டென மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை திருப்பினர். கட்டிடத்தின் மீது மோதாமல் ஹெலிகாப்டர் நூலிழையில் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார்.

கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர். இந்த சோகம் அடங்குவதற்குள் நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *