சென்னை: செய்தி ஆசிரியர் லெனினை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக தினமலர் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி…
சென்னை தினமலர் நாளிதழ் அலுவலகத்திற்கு, நேற்று மாலை 6.30 மணியளவில் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் வில்வராணி முருகன், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், உமாபதி, முத்துவேல் பாண்டியன் ஆகியோர் சாதாரண உடையில் வந்தனர். “செய்திப் பிரிவினருடன் பேச வேண்டும்’ என அவர்கள் தெரிவித்தனர்.
அலுவலகத்தின் உள்ளே வந்து, வரவேற்பறையில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம், தினமலர் நாளிதழ் சார்பில் இராமலிங்கம் பேசினார். பின்னர் செய்தி ஆசிரியர் லெனின், போலீஸ் அதிகாரிகளிடம் பேசினார்.
பேசிக் கொண்டிருக்கும் போதே, செய்தி ஆசிரியர் லெனினிடம் போலீசார், “கடந்த 4ம் தேதி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, உங்களை விசாரிக்க வேண்டும். கமிஷனர் அலுவலகத்திற்கு வாருங்கள்’ என அழைத்தனர். “விசாரணை தானே, இங்கேயே விசாரியுங்கள்’ எனக் கூறினார்.
விசாரணைக்கு வந்திருந்த போலீசார் இடையிடையே யாரிடமோ மொபைல் போனில் பேசி உத்தரவுகளைப் பெற்று வந்தனர். “திடீரென உங்களை கைது செய்கிறோம்’ என செய்தி ஆசிரியரைப் பார்த்து போலீசார் தெரிவித்தனர்.
செய்தி ஆசிரியர் லெனின், “என்னை கைது செய்ய வாரன்ட் இருக்கிறதா?’ என கேட்டதற்கு, “உங்களை கைது செய்ய வாரன்ட் தேவையில்லை’ என போலீசார் தெரிவித்தனர். “திடீரென அழைத்தால் எப்படி வர முடியும். பத்திரிகை பணி பாதியில் நிற்கிறது; ஆசிரியரிடம் பேசி விட்டு வருகிறேன்’ என லெனின் தெரிவித்ததற்கு, “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்’ எனக் கூறி வலுக்கட்டாயமாக பலப்பிரயோகம் செய்து அவரை இழுத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது…
இந்த நிலையி்ல் லெனின் கைது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகை புவனேஸ்வரி விபசார தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட்ட போது, கடந்த 4ம் தேதி புவனேஸ்வரி உள்ளிட்ட நடிகைகள் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக நடிகர் சங்க பொதுச்செயலர் ராதாரவி புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் தமிழ்நாடு பெண்கள் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிந்து, இச்செய்தி வெளியிட்ட செய்தி ஆசிரியர் லெனின் நேற்று கைது செய்யப்பட்டார்.
முதன்மை பெருநகர எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லெனினை, அக்டோபர் 21ம் தேதி சிறையில் அடைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply