சேலம் : இந்தியாவில், விமானிகளுக்கான (பைலட்) தேவை அதிகரித்து வருவதால், சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில், விமான பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. வர்த்தக நோக்கில், விமான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாடு முழுவதும், புதிதாக 500 விமானங்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
விமான சேவை வழங்கும் போது (இயக்குவதற்கு மட்டுமல்ல), ஒரு விமானத்துக்கு, குறைந்தபட்சம் ஆறு விமானிகள் தேவைப்படுவர். விமானிகள் தேவை அதிகரிக்கும் என்பதால், நாடு முழுவதும் புதிதாக விமான ஓட்டுனர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன.சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில், புதிதாக இரண்டு விமான பயிற்சி பள்ளிகள் துவக்கப்படுகின்றன.
பெங்களூரைச் சேர்ந்த, “கோஹினூர் பிளையிங் கிளப்’ மற்றும் சென்னையை சேர்ந்த, “இன்டர்நேஷனல் பிளையிங் கிளப்’ ஆகியவை, சேலத்தில் விமான பயிற்சி பள்ளிகளை துவக்கவுள்ளன.இந்த இரண்டு விமான பயிற்சி பள்ளிகளும், ஐந்து மாதங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. சேலம் தவிர, தூத்துக்குடி, புதுச்சேரி விமான நிலையங்களிலும், பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.
Leave a Reply