போலி கிரெடிட் கார்டு கும்பல் கண்டுபிடிப்பு : இலங்கையைச் சேர்ந்த வாலிபர் சிக்கினார்

posted in: மற்றவை | 0

tblsambavamnews_97466677428சென்னை : போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் உள்ள, டயானா கோல்ட் ஸ்டோர்ஸ் மேலாளர் செந்தில். இவரது கடைக்கு, ஹரிகுமார் என்பவர் கடந்த மாதம் 17ம் தேதி காலை 11.30 மணிக்கு வந்துள்ளார். கடையில் பொருட்களை வாங்கி விட்டு, அதற்கான பணத்திற்காக கிரெடிட் கார்டை கொடுத்துள்ளார்.

அந்த கிரெடிட் கார்டில் சந்தேகம் ஏற்பட்டதால், வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஹரிகுமார் கொடுத்தது போலி கிரெடிட் கார்டு என தெரிந்தது. ஹரிகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் சென்னை போலீசில் புகார் அளித்தார். ஹரிகுமாரை கடந்த மாதம் 15ம் தேதி கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் பிறந்து, கனடாவில் வளர்ந்த உமேஷ் என்ற ஜாட்டி போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்தது தெரிந்தது.

உமேஷ் தற்போது சென்னை போரூரில் தங்கியிருப்பதாகவும் ஹரிகுமார் போலீசில் தெரிவித்துள்ளான். தனிப்படை போலீசார் போரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த உமேஷை போலீசார் கைது செய்தனர். உமேஷிடமிருந்து 24 போலி கிரெடிட் கார்டுகள், அவற்றை தயாரிக்க பயன்படும் இயந்திரம் மற்றும் லேப் – டாப் கைப்பற்றப்பட்டன.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் கூறியதாவது: போலி கிரெடிட் கார்டு தயாரிக்க தேவையான பிளாஸ்டிக் வெற்று கார்டுகளை உமேஷ் மலேசியாவிலிருந்து பெற்றுள்ளான். இக்கார்டுகள் “பர்கோ’ மெஷின் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பின், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ஒரிஜினல் கிரெடிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அனுப்பி வைத்துள்ளான்.

கிரெடிட் கார்டை, கடை அல்லது ஓட்டலில் பயன்படுத்தும்போது, அவற்றை “ஸ்வைப்’ செய்வதற்கு முன், “ஸ்கிம்மர்’ இயந்திரத்தில் தேய்த்து, அதில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன. பின், இத்தகவல்களை போலி கிரெடிட் கார்டில் உள்ள மேக்னடிக் ஸ்டிரிப்பில் பதிவு செய்துள்ளனர்.

எம்போஸ் மெஷினை பயன்படுத்தி, போலி கிரெடிட் கார்டில் பெயர், கார்டு காலாவதியாகும் நாள், எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர். இப்போலி கிரெடிட் கார்டுகளை தங்களது கும்பலில் உள்ள ஆட்களிடம் கொடுத்து, பொருட்களை வாங்கி மோசடி செய்துள்ளனர்.

முதல்முறையாக, போலி கிரெடிட் கார்டு தயாரிக்கும் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம். உமேஷிடம் விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய மற்ற கும்பல்களையும் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். இதில் வெளிநாட்டு கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும்.

உமேஷ் இதுவரை 150 போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்துள்ளான். இவற்றை பயன்படுத்தி 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளான். சென்னை மட்டுமின்றி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற ஊர்களிலும் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி உமேஷின் கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. உமேஷ் இரண்டு மாதமாக சென்னையில் தங்கியுள்ளான். போலி கிரெடிட் கார்டு மட்டுமின்றி, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகிய ஆவணங்களையும் போலியாக தயாரிக்கும் திறன் உமேசுக்கு உள்ளது.

போலி கிரெடிட் கார்டு தொடர்பாக வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சில ஆலோசனைகளை ஏற்கனவே வழங்கியுள்ளோம். யாராவது அதிகளவிலான தொகைக்கு பொருட்களை வாங்கினால், கூடுதல் கவனம் தேவை.

கிரெடிட் கார்டில் உள்ள போட்டோ, கையெழுத்து போன்றவற்றை சரிபார்க்க வேண்டும். சாதாரண ஆள் கிரெடிட் கார்டு மூலம் அதிக தொகைக்கு பொருளை வாங்கினாலோ, பதட்டமாக இருந்தாலோ, சீக்கிரமாக பொருளை வாங்கிக் கொண்டு போக முயற்சித்தாலோ சந்தேகப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலி கிரெடிட் கார்டு தயாரித்த உமேஷ், மெரைன் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். தான் கற்ற பொறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து மோசடி செய்துள்ளான். உமேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *