புதுடில்லி: ‘இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…’ என்று ‘டிவி’ சேனல்கள் தான் போடுமா என்ன… திரைக்கு வந்து சில நாட்களான புத்தம் புதிய பாலிவுட் படங்களை இனி டி.டி.எச்., மூலம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தே பார்க்கலாம். கேபிள் ஆபரேட்டர்களுக்கு மட்டுமல்ல, ‘டிவி’ சேனல்களுக்கும் கூட டி.டி.எச்., இப்போது போட்டியாக உள்ளது.
இந்தியாவில், ஆறு பெரிய டி.டி.எச்., ஆபரேட்டர்களில் டாடா ஸ்கை குறிப்பிடத்தக்கது. 40 லட்சத்து 50 ஆயிரம் பேர் டாடாவுக்கு வாடிக்கையாளர்கள். திரைக்கு வந்து சில நாட்கள் மற்றும் ஒன்றிரண்டு வாரங்களே ஆன புத்தம் புதிய பாலிவுட் திரைப்படங்களை டாடா டி.டி.எச்., ஒளிபரப்புகிறது. படத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. திரைக்கு வந்து நான்கு நாட்கள் மட்டுமே ஆன சல்மான் கான் நடித்த ‘மெயின் ஆர் மிஸஸ் கன்னா’ , ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘காமினி’, ‘வாட்’ஸ் யுவர் ராசி?’ போன்ற பாலிவுட் படங்களை டி.டி.எச்., மூலம் ஒளிபரப்பி ரசிகர்களின் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறது டாடா.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். காமினியை ஒரு லட்சம் பேரும், வாட்’ஸ் யுவர் ராசி?’ படத்தை 20 ஆயிரம் பேரும் பார்த்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். சில படங்கள் டி.டி.எச்., ரசிகர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு அதில் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன. ‘பிர் கபிர்’ படம் தியேட்டருக்கே போகாமல் டாடா டி.டி.எச்.,ல் ஒளிபரப்பப்பட்டது.
பிரபல தயாரிப்பாளர்களின் படங்களை ஒரே நேரத்தில் தியேட்டரிலும், டி.டி.எச்.,லும் ஒளிபரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். அப்படி நடந்தால் திருட்டு ‘விசிடி’ க்களின் ராஜ்யம் முற்றிலும் குறைந்து விடும் என்கின்றனர். புதிய பாலிவுட் படங்களின் ஒளிபரப்புக்கு ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. பின்னே? தியேட்டருக்கு குடும்பத்தோடு போனால் குறைந்தபட்சம் 500 ரூபாயாவது பழுத்துவிடும். இப்போது வீட்டிலிருந்தே 100 ரூபாய் செலவில் நெருக்கடி, விசில் சத்தம், சிகரெட் நாத்தம், பெட்ரோல் செலவு எதுவும் இல்லாமல் நிம்மதியாகப் பார்க்கலாம்.
Leave a Reply