டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சக அலுவலகங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால், அதன் அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.
புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகி விடாது என்பதை நான் முதலில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மத்திய விஜிலென்ஸ் ஆணையத்தின் உத்தரவுப்படி சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் விசாரணை அறிக்கை வரும் வரை பொறுத்திருப்போம்.
அதே நேரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றோ அல்லது நடவடிக்கை எதுவும் கூடாது என்றோ நான் கூறவில்லை. கூட்டணி என்றால் ஊழல் கூட்டணி என்றும் அர்த்தமல்ல.
அடுத்த 2 ஆண்டுகளில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2011-2012ம் ஆண்டுக்குள் நிதி பற்றாக்குறை 5.5 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்றார்.
பி்ன்னர் டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் நடந்த மாநாட்டில் அவர் பேசுகையி்ல்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம் 2014ம் ஆண்டு முடியும்போது எனது அமைச்சர் பதவிக்காலமும் முடியும். அப்போது எனக்கு 79 வயது ஆகிவிடும். அந்த சமயத்தில் நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்.
என்னிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. தற்போது அவற்றை படிக்க நேரம் இல்லை. தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் போது அவற்றை எல்லாம் படிக்கப் போகிறேன் என்றார்.
Leave a Reply