மகாராஷ்டிர புதிய முதல்வராக அசோக் சவான் நாளை பதவி ஏற்கிறார். உள்துறை யாருக்கு என்ற இழுபறி நீடிப்பதால் அவருடன் துணை முதல்வர் சாகன் புஜ்பால் மட்டும் பதவி ஏற்கிறார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்துறையை கேட்பதால் அத்துறையை இரண்டாக பிரித்து பங்குபோட்டுக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் கடந்த 13-ம் தேதி நடந்தது. முடிவுகள் 22-ம் தேதி அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து சட்டசபை தேர்தலில் 2 முறை வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக ஆட்சி அமைத்த காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. ஆனாலும், துறை ஒதுக்கீடு பிரச்னை முடியாததால், ரிசல்ட் வெளியாகி 12 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
மகாராஷ்டிராவில் முதல்வரோடு சேர்த்து மொத்தம் 43 பேர் அமைச்சர் ஆகலாம். கடந்த முறை 24 இடங்கள் தேசியவாத காங்கிரசுக்கும், 19 இடங்கள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டன. முதல்வர் பதவியை காங்கிரசுக்கு தள்ளிவிட்ட தேசியவாத காங்கிரஸ், முக்கிய இலாகாக்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு ஏகபோக ஆட்சி நடத்தியது.
இப்போது நடந்து முடிந்த தேர்தலில், தே.வா.காங்கிரசை விட காங்கிரஸ் 20 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. எனவே உள்துறை, நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் மட்டுமல்லாது 24 இடங்கள் வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்துள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. “23-20 என்ற அளவில் இலாகா பங்கிட்டுக்கொள்வோம். உள்துறை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து, பிரச்னையை சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்காக உள்துறையை இரண்டாக பிரிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பிரித்தால், முக்கிய பொறுப்புகள் இருக்கும் துறையை தங்களுக்கு ஒதுக்குமாறு தே.வா.காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அரசியல் சாசன சட்டப்படி, மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான கெடு நாளையுடன் முடிகிறது. அதற்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி கவர்னருக்கு ஏற்படும். இதை தவிர்க்க அசோக்சவான் முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். இன்று மாலைக்குள் இலாகா பங்கீடு நெருக்கடி தீர்ந்து விட்டால் அவருடன் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். இல்லாவிட்டால், துணை முதல்வர் சாகன் புஜ்பால் மட்டும் பதவி ஏற்பார். மற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி பின்னர் நடக்கும் என மும்பை வட்டாரங்கள் தெரிவித்தன. இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை இன்று சந்திக்கின்றனர்.
Leave a Reply