காத்மாண்டு : “பார்லிமென்ட்டில் பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல் மாவோயிஸ்ட்கள் தடுத்து வருவதால், அமைச்சர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு, அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது’ என, நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாள நிதி அமைச்சர் சுரேந்திரா பாண்டே கூறியதாவது: நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, புதிய திட்டங்கள் எதையும் நிறைவேற்ற விடாமல் அவர்கள் தடுத்து வருகின்றனர். குறிப்பாக, இந்தாண்டுக்கான பட்ஜெட் இன்னும் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படவில்லை. மாவோயிஸ்ட்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை, பள்ளி, சிறை நிர்வாகம் ஆகியவை நிதி இல்லாமல் ஸ்தம்பித்து போயுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோர், மருந்துகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது. நிதி நெருக்கடியால் அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பட்ஜெட் நிறைவேற்றப்படவில்லை என்றால், நிலைமை மேலும் மோசமடையும். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்கும்படி, மாவோயிஸ்ட்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில், நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு சுரேந்திரா பாண்டே கூறினார்.
Leave a Reply