தாமரச்சேரி : ஒரே பள்ளியில், ஒன்பது இரட்டைக் குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாமரச் சேரி அடுத்த கட்டிப்பாறா ஊராட்சியில், நஸ்ரத் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், இரண்டாம் வகுப்பில் நிதா, பீத்தா, சம்ரூத் ஆகிய மூன்று குழந்தைகள் பயின்று வருகின்றனர். அம்மூவரும், ஒரே பிரசவத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பிறந்தவர்கள். இவர்கள் இரு பெண்ணும், ஒரு ஆணும் ஆவர். இவர்களது உடன்பிறப்புகளான இரட்டைப் பிறவிகளும் அதே பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்களில் ஆறாம் வகுப்பு பயிலும் சாஜித், ஏழாம் வகுப்பில் பயிலும் சஜினா ஆகியோரும் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், அப்பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் அதீபா ரூபி, அனிஷா ரூபி, இரண்டாம் வகுப்பில் பயிலும் மாஜிதா மும்தாஸ், மெகபூபா மும்தாஸ் ஆகியோரும், மூன்றாம் வகுப்பில் பயிலும் அஜல்யா, அஜன்யா ஆகியோரும்,ஐந்தாம் வகுப்பு பயிலும் அக்கீனா, அனெக்கா ஆகியோரும், ஆறாம் வகுப்பில் பயிலும் அபின், அருண் ஆகியோரும், அதே வகுப்பில் கல்வி பயிலும் சகல், சுகைல் ஆகியோரும், ஏழாம் வகுப்பு பயிலும் ரமீஸ், ரயீஸ் ஆகியோரும், அபின் ஷாத், வெபின் ஷாத் ஆகியோரும் வெவ்வெறு பெற்றோருக்கு பிறந்த இரட்டை பிறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் நடுநிலைக் கல்வி பயில்பவர்களில் மட்டும் 12 பேர் இரட்டை பிறவிகள். இவர்கள் அனைவருக்கும் அப்பள்ளியில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவர்கள் ஒவ்வொரு ஜோடியும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதில் வல்லவர்களாக உள்ளனர்.இதுமட்டுமல்லாமல், இவர்கள் அனைவரும் விளையாட்டிலும் வல்லவர்களாக உள்ளனர். இவர்களில் சகல் என்ற குழந்தை அக்கல்வி மாவட்டத்தில் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளதாக அப்பள்ளி ஆசிரியர் தெரிவித் தார்.
Leave a Reply