புதுடெல்லி : பிஎப் பிடித்தம்
செய்வதற்கான அடிப்படை சம்பளம், அகவிலைப்படி இணைந்த உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.10,000 ஆகிறது. ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர் இருந்தால் பிஎப் கட்டாயம் என்பதும் இனி, 10 பேர் இருந்தாலே கட்டாயமாகிறது.
மத்திய தொழிலாளர் நலத் துறைக்கு பிஎப் அமைப்பு (இபிஎப்ஓ) புதிய பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அது ஏற்கப்பட்டால், பிஎப் வசதி பெறும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் எதிர்கால சேமிப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். இப்போதைய பிஎப் விதிமுறைப்படி, அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி சேர்ந்து அதிகபட்சம் ரூ.6,500 பெறுவோருக்கு, அதில் 12 சதவீதத்தை மாதந்தோறும் நிறுவனம் தனது பிஎப் பங்காக செலுத்த வேண்டும். இதனால், பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து தரும் நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு பேசிக், டிஏ என காட்டாமல், மொத்த ஊதியமாக ரூ.6,500க்கு மேல் அளித்தாலும் பிஎப் செலுத்துவதில்லை. அதேபோல, குறைந்தது 20 பேர் பணியாற்றும் நிறுவனங்கள் பிஎப் அமைப்பில் பதிவு செய்வது இப்போது கட்டாயம். அதையும் தவிர்க்கும் வகையில், பல நிறுவனங்கள் தொழிலாளர் எண்ணிக்கையை 20க்கு கீழே பராமரிக்கின்றன. மற்றவர்களை தினக்கூலியாக காட்டி சட்டத்தில் இருந்து தப்புவதும் நடக்கிறது. இந்நிலையில், நிறுவனங்கள் பிஎப் செலுத்துவதை அதிகரிக்கும் வகையில் பேசிக், டிஏ சேர்ந்த அதிகபட்ச தொகையை ரூ.6,500ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்துவது, 10 பேர் இருந்தாலே பிஎப் கட்டாயம் என மாற்றுவது என பிஎப் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன் பரிந்துரையை தொழிலாளர் நல அமைச்சகம் ஏற்று, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால், பிஎப் வசதி பெறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயரும் எனத் தெரிகிறது.
Leave a Reply