அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட.
தமிழக காங்கிரஸின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை எல்லாம்…. ஈழத் தமிழர் நலனுக்குக் குரல் கொடுப்பதற்காகவே துறந்த தமிழருவி மணியன், அக்டோபர் 2 முதல் ’காந்திய அரசியல் இயக்கத்தை’த் தொடங்குகிறார். ”பிளாஸ்டிக் பூக்கள் போன்ற இன்றைய கட்சிகளுக்கு மத்தியில் தும்பைப் பூ இயக்கமாக இது இருக்கும்” என முன்னோட்டம் கொடுத்தவரிடம் சில கேள்விகளை வைத்தோம். பதில்களைக் கொட்டத் தொடங்கினார் ’தமிழருவி’! காந்திய அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதன் நோக்கம் என்ன? இன்றைய அரசியல் முழுக்க முழுக்கப் பணம் சார்ந்த தொழிலாக மாறிவிட்டது. வாரிசு அரசியலும் நாளுக்குநாள் மிக மோசமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு கண்கண்ட சமீபத்திய உதாரணம்… ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மறைந்தபோது, அவரது உடல் அருகே இருந்து கண்ணீர்விட்டுக் கதறவேண்டிய மகன் ஜெகன், தன் தந்தை அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கான வியூகங்கள் வகுப்பதில்தான் அதிக நேரத்தைச் செலவழித்தார். ஒரு மாநிலத்தின் முதல்வராவதற்கு, ஏற்கெனவே முதல்வராக இருந்தவரின் மகனாக இருப்பதே போதுமான தகுதியாகி இருக்கிறது. அரசியல், சமூகம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அடிப்படை தகுதியும் இல்லாத மிகச் சாதாரணமான மனிதர்கள், வாரிசு பலத்தை மட்டுமே வைத்து ஆட்சி நாற்காலியில் அமர்வது நிர்வாகத் திறனை மோசமாகச் சீர்குலைக்கும். ஆந்திராவில் இப்படியென்றால்… தமிழகத்தில் முதல்வரின் மகனான மு.க.ஸ்டாலின், வாரிசு அரசியல் மூலமாகவே துணை முதல்வர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் என சொல்லிவிட முடியாது. நெருக்கடி நிலை காலம்தொட்டு கடந்த 34 ஆண்டுகளாக அரசியல் அனுபவங்களை பெற்றவர் மு.க.ஸ்டாலின். ஆனால் மு.க. அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் பெற்றிருக்கக்கூடிய அரசியல் அந்தஸ்து, முழுக்க முழுக்க கலைஞரின் தயவால் பெற்றது. இவர்கள் அனைவரும், சமூக மக்களுக்காக எந்த வகையில் உழைத்தனர்? என்னென்ன தியாகம் செய்தனர்? எந்தவிதமான இழப்புகளை சந்தித்தனர்? நேர்மை, எளிமை, தன்னல மறுப்பு, சமூக நலனுக்கான சேவை ஆகியவைதான் பொதுவாழ்வில் காந்தியம் வளர்த்தெடுத்த அடிப்படைப் பண்புகள். இந்தப் பண்புகளை பெற்றவர்கள் எத்தனை பேர் இன்று இந்திய அரசியலில் மிக முக்கியமான இடங்களைப் பிடித்திருக்கிறார்கள்? இந்தக் கேள்வி என் இதயத்தில் எழுந்தபோது, மீண்டும் காந்தியம் மீட்டெடுக்கப்படவேண்டும் என நினைத்தேன்., அதற்காகத்தான் காந்தியின் பிறந்த நாளில் இந்த இயக்கம் காண்கிறோம் மற்ற அரசியல் இயக்கங்களைக் காட்டிலும் இது எந்த வகையில் மாறுபட்டதாக இருக்கும்? இன்று அரசியல் என்பது மூலதனம் இன்றி நடத்தப்படும் வெற்றிகரமான வியாபாரம் ஆகிவிட்ட நிலையில்… அரசியல்வாதிகளைப் பார்த்தாலே அருவருப்போடு விலகி நிற்கிறார்கள் நல்ல மனிதர்கள். அவர்கள் மௌனப் பார்வையாளர்களாக மட்டுமே ஒதுங்கி நிற்காமல் சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எங்கள் இயக்கத்தின் குறிக்கோள். சாக்கடை நாறுகிறதே என மூக்கைப் பிடித்தபடி ஒதுங்கிச் சென்றால் ஒரு பயனும் இல்லை. அந்தச் சாக்கடைக்குள் கால் வைத்து இறங்கி அதில் படிந்து கிடக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தினால் ஒழிய நாற்றம் தீரப்போவதில்லை. காந்திய அரசியல் இயக்கத்தில் சேரத் தயாராக இருக்கும் அனைவரும் இப்படித் துப்புரவு செய்யும் தோட்டிகளாக மாறவேண்டும். ’நூறு நல்ல இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். நான் புதிய இந்தியாவை படைத்துக் காட்டுகிறேன்’ என்றார் விவேகானந்தர். தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஆறரை கோடி மக்களில் சமூகப் பொறுப்புள்ள இரண்டு லட்சம் இளைஞர்கள் என்னோடு இருந்தால், அரசியல் உலகில் படிந்துக்கிடக்கும் அழுக்குகளை அகற்றுவதற்கு ’காந்திய அரசியல் இயக்கம்’ முனைப்போடு போராடும் காந்தியின் வழியில் நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் எப்படி? நாடு சுதந்திரம் பெற்றதும்… ’குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மிக எளிமையான வீடுகளில்தான் குடியேற வேண்டும். ஏழை இந்தியாவின் விதியை எழுதப்போகும் ஆட்சியாளர்கள், வைஸ்ராயைப்போல பெரிய மாளிகைகளில் வசிக்கலாகாது’ என காந்தி பரிந்துரைத்தார். ஆனால் காந்தியின் பரிந்துரையை நேருவே நடைமுறைப்படுத்தவில்லை. எளிமையாக வாழ்வது என்பது தவம். அந்த தவத்தை இன்று எந்த அரசியல்வாதியும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. ஒரு நாளைய வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவாய் பெறுகிற இந்தியர்கள் இன்று சுமார் எண்பது கோடி பேர் இருக்கிறார்கள். இந்த ஏழை பாழைகளை நெஞ்சில் நிறுத்தி… அவர்களுக்குக் கிடைக்காத வாழ்வும் வசதியும் தனக்குத் தேவையா என மறுதலிக்கிற எளிமை மிக்கவர்கள்தான் அதிகாரத்தில் அமரவேண்டும். சோனியாவும் ராகுலும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதாலோ, ரயிலில் செல்வதாலோ… அரசின் செலவுகள் எள்மூக்கு முனை அளவுகூட குறையப்போவதில்லை. ஒவ்வொரு அரசியல் பிரமுகரைச் சுற்றியும் பாதுகாப்புக்கு என ஏன் இத்தனை பூனைப் படைகள்? இதுபோன்ற மக்கள் நலன் சாராத எத்தனையோ செலவுகள் இன்னமும் அரசால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில்… இந்தப் பயண சிக்கனக் காட்சிகள் எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கான நாடகக் காட்சிகளே.. உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறதே..? வெறும் மொழியை மட்டும் வளர்ப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கமா? ஒரு மொழியைப் பேசும் மக்களே அழிக்கப்படுகிறபோது, அந்த மொழி எப்படி வாழும்? வளரும்? இனம் இருந்தால்தானே மொழி? உலகம் முழுதும் உள்ள தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய பொறுப்பு தாயகத் தமிழகத்துக்கு மட்டும்தான் உண்டு. உலகத்தில் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழர்கள் தங்கள் துயரைத் துடைப்பதற்கு ஒரு துணை வரும் என நம்பிக்கையோடு திரும்பிப் பார்ப்பது தமிழகத்தைத்தான். ஆனால்… சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஈழத்தில் தமிழர்கள் மீதான உச்சகட்ட தாக்குதல் வீரியமான போதே… தமிழகத்தின் ஆளும் கட்சி உட்பட அத்தனை கட்சிகளும் மத்திய அரசுக்கு உரிய நிர்ப்பந்தம் தந்திருந்தால், இவ்வளவு பெரிய இழப்புகள் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்திருக்காது. புலிகளை காக்கவேண்டும் என்பதைவிட, ஈழ மக்களின் உயிரையும், உடைமைகளையும் காக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்தியா செயல்பட்டிருந்தால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஒரு மௌனப் பார்வையாளனாக நீடித்திருக்காது. ஈழத் தமிழர்கள் இறுதிவரை தமிழகத்தையும், இந்தியாவையும் அமெரிக்காவையும் நம்பினார்கள். ஆனால், ஒரே நாளில் 25 ஆயிரம் தமிழர்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டதற்கும்… மூன்று லட்சம் தமிழர்கள் இன்றுவரை வதை முகாம்களில் அடைக்கப்பட்டு தண்ணீருக்குக் கூட தவித்துக் கொண்டிருப்பதற்கும் இந்தியாவும் தமிழ்நாடும் முக்கியக் காரணம் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியாது. ’இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் போனால், தமிழகம் கொந்தளிக்கக் கூடும்’ என்ற அச்ச உணர்வு எழாதபடி பார்த்துக் கொண்டவர் நம் முதல்வர் கலைஞர். இதை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும். மும்பையில் ஒரு பீகார் இளைஞன் பேருந்துப் பயணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஒட்டுமொத்த பீகாரே கட்சிகளைக் கடந்து பொங்கி எழுந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்ட பின்பும் அவர்களின் வியர்வையில் உருவாக்கப்பட்ட உடைமைகள் அத்தனையும் அழிக்கப்பட்ட பின்பும் கொத்தடிமைகளாய் அவர்கள் நடத்தப்படுவதைப் பார்த்த பிறகும்… தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவரவர் வேலையில் ஈடுபட்டுள்ளனர். ’இமயத்தில் ஒருவன் இருமினால்… குமரியில் ஒருவன் நீர் கொண்டு தருவான்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், இருபது, முப்பது கிலோ மீட்டர் பக்கத்தில்… நம் இனமே அழிக்கப்பட்ட பின்பும் ’மானாட மயிலாட’ பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தமிழனத்துக்கு … ஒரு மொழி எதற்கு? ஒரு மாநாடு எதற்கு? அந்த மாநாட்டை நடத்த ஓர் அரசு எதற்கு? இனப் பற்றற்ற ஒரு மனிதன் உயிர் அற்ற சடலத்தைப் போன்றவன்தான். அப்படிப்பட்ட தமிழர்கள் வாழும்(?) தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதால் தமிழ் வளரப்போவதுமில்லை.தமிழ் இனம் சிறக்கப்போவதும் இல்லை!
Leave a Reply