சென்னை, அக்.1 அரசியலை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக, ‘காந்திய அரசியல் இயக்கம்’ எனும் பெயரில் புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் என்பது சாக்கடை அல்ல; அரசியலில் இருப்பவர்கள் சாக்கடை யாக மாறி வருகிறார்கள். அந்தச் சாக்கடை மனிதர்களை தூய்மைப்படுத்தி, சமூக விதியை எழுதும் அரசியலை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக காந்திய அரசியல் இயக்கம் தொடங்கப்படுகிறது.
அண்ணல் காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதி (நாளை) மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பிலிம் சேம்பர் அரங்கத்தில் சமூக ஆர்வலர் மதுரை போஸ் தலைமையில் இயக்கத் தொடக்க விழா நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசுகிறார். இயக்கம் குறித்த விளக்கவுரையை நான் ஆற்றுகிறேன்.
சமூக நலனில் அக்கறையுள்ள, சுயநலக் கலப்பற்ற, நேர்மையும், உண்மையும், ஒழுக்கமும் உள்ளவர்கள் இந்த இயக்கத்தில் சேரலாம். ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சிப்பதுடன், மதுவிலக்கு, தீண்டாமை எதிர்ப்பு, நேர்மையான அரசியல், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்த இயக்கம் செயல்படும் என்று கூறினார்.
Leave a Reply