கொழும்பு : “ராணுவப் புரட்சி வெடிக்கும் என்ற பயத்தில், அதை அடக்குவதற்காக இலங்கைக்கு இந்திய ராணுவத்தை வரவழைப்பதற்கு, இலங்கை அரசு ஏற்பாடு செய்தது’என்ற பரபரப்புத் தகவலை, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு வெற்றியைத் தேடித் தந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நேற்று முன்தினம் தனது ராணுவப் பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிடுவதற்கு வசதியாகவே, அவர் தனது ராணுவ முப்படைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.இதுகுறித்து, பல்வேறு தகவல்கள் வெளியானதை அடுத்து, அதிபர் ராஜபக்ஷேவுக்கு, சரத் பொன்சேகா எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் பரபரப்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது:இலங்கையில் வெல்ல முடியாத சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளை, கடந்த மே மாதம் ராணுவம் தோற்கடித்தது. இதையடுத்து,அரசுக்கு எதிராக ராணுவப் புரட்சி வெடிக்குமோ என்ற பயத்தில், ராணுவத் தளபதியாக இருந்த நான், அந்த பதவியில் இருந்து வேறு பதவிக்கு மாற்றப்பட்டேன். முப்படைகளின் தலைவர் என்ற, எந்தவிதமான அதிகாரமும் இல்லாத புதிய பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவி எனக்கு கொடுக்கப்பட்டது. சில அமைப்புகள் கொடுத்த தவறான தகவலின் பேரில், என்னை ஒதுக்கி வைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், கடந்த மாதம் 15ம் தேதி, ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற அச்சத்தில், இலங்கை அரசு, இந்தியாவை தொடர்பு கொண்டது.
ராணுவப் புரட்சியை அடக்க, இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி, அப்போது கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், புலிகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெற்ற இலங்கை ராணுவத்தின் செல்வாக்கு சீர்குலைந்தது. இதனால், எனக்கு தாங்க முடியாத மன உளைச்சல் ஏற்பட்டது.எனக்குப் பின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. அவர் இந்த பதவிக்கு எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என தெரியவில்லை.இவ்வாறு அந்த கடிதத்தில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, சரத் பொன்சேகாவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply