மதுரை : மேலூர் அம்பலக்காரன்பட்டியில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் 266 ஏக்கர் பரப்பில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இந்தோனேசிய தொழில் அதிபர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
மு.க.அழகிரி பேசுகையில், “”இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யும்படி கூறினேன். இதையடுத்து அந்நாட்டின் பெரிய தொழில் நிறுவனமான “டெக்ஸ்மேக்கோ’ மதுரையில் டிராக்டர் தொழிற்சாலை நிறுவ முன்வந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டிராக்டர்கள் கிடைக்கும். “”இக்கம்பெனியின் இயக்குனர் சீனிவாசன், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரைச் சேர்ந்தவர். இத்தொழிற்சாலை அமையும்போது 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,” என்றார். இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், “”இங்கு இரும்பு, விவசாய தளவாடங்கள் உற்பத்தியும் துவங்கப்படும்” என்றார்.
கலெக்டர் மதிவாணன் கூறுகையில், “”இந்த இடம் வருவாய்த்துறைக்கு உட்பட்டது என்பதால் நில ஆர்ஜிதம் செய்வதில் காலதாமதம் ஏற்படாது. தொழில் துவங்கும் பட்சத்தில் உடனடியாக நில ஆர்ஜிதம் செய்யப்படும்’ என்றார். மூர்த்தி எம்.எல்.ஏ., தி.மு.க., நகர செயலாளர் தளபதி, டி.ஆர்.ஓ., தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்றனர்.
கல்குவாரி தொழிலாளர்: ஒத்தக்கடை யானைமலையில் கல்குவாரி தொழிலாளர்களுக்கு கல் உடைக்க தற்காலிக அனுமதியை அமைச்சர் மு.க.அழகிரி வழங்கினார். அவர் கூறுகையில், “”கடந்த 20 ஆண்டுகளாக கல்உடைக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள், இப்பகுதியில் கல்உடைக்க 10 நாட்களுக்கு முன் அனுமதி கோரினர். முதல்வரிடம் கூறி அனுமதி பெற்றேன். 400 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
Leave a Reply