நியூயார்க் : அமெரிக்காவில் 51 ஆண்டுகளுக்கு முன் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள், ரூ.47,000 அபராத தொகையுடன் இப்போது பத்திரமாக தபாலில் திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போனிக்ஸ் நகரின் கேமல்பேக் உயர்நிலைப் பள்ளி லைப்ரரி பொறுப்பாளர் ஜார்ஜெட் பார்டைன் கூறியதாவது: லைப்ரரிக்கு நேற்று முன்தினம் வந்த தபாலில், 2 புத்தகங்கள் இருந்தன. அத்துடன் ரூ.47,000க்கான (1000 டாலர்) மணி ஆர்டரும் வந்து சேர்ந்தது. அதனுடன் இருந்த கடிதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. 1959ம் ஆண்டு இதே லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள் அவை. 51 ஆண்டுகள் கழித்து பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை அனுப்பியுள்ளனர். யாரென குறிப்பிட விரும்பாத அவர்கள், பள்ளி லைப்ரரியில் புத்தகம் எடுத்த பிறகு வேறு மாநிலத்துக்கு இடம் மாறி சென்றதாக கூறியுள்ளனர். பிறகு, புத்தகங்களை மாணவர் திருப்பி அனுப்பத் தவறி, பரணில் போட்டு வைத்துள்ளார். சமீபத்தில் அதைக் கண்டதும், அப்போதைய ஒருநாள் அபராதத் தொகையான 2 சென்ட் கணக்கிட்டு மணி ஆர்டர் அனுப்பியதாக கடிதத்தில் எழுதியுள்ளனர். தினசரி 2 சென்ட் என்றாலும் 51 ஆண்டுகளில் அபராதம் ரூ.35,000 (745 டாலர்) ஆகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அபராத தொகை அதிகரித்திருக்கலாம் என்பதால், ரூ.47,000 அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இந்தப் பணத்தில் புதிய புத்தகங்கள் வாங்கப்படும் என்றார்..
Leave a Reply