வாஷிங்டன்: “அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா இடையே சம அளவிலான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவை விட, பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன’ என்று, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள நாடுகள் குறித்து அணுசக்தி நிபுணர்கள் ராபர்ட் நாரீஸ் மற்றும் ஹான்ஸ் கிறிஸ்டன் ஆகியோர் ஆய்வு ஒன்றை நடத்தினர்.
இது தொடர்பாக, “அடாமிக் சயின்ஸ்’ பத்திரிகையில் அவர்கள் கூறியுள்ளதாவது:அணு ஆயுத உற்பத்தியில், ஆசிய நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் சம அளவில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் அதன் பங்குக்கு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் 70 முதல் 90 அணு ஆயுதங்களையும், இந்தியாவைப் பொறுத்தவரையில் 60 முதல் 80 அணு ஆயுதங்களையும் தங்களிடம் வைத்துள்ளன.அணு ஆயுத உற்பத்தியைப் பொறுத்தவரையில் இஸ்லாமாபாத், டில்லி மற்றும் பீஜிங் ஆகியவற்றுக்கிடையே, சம அளவிலான போட்டிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த அணு ஆயுதங்களை தயாரிக்கும் இடங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை எங்கு தயாரிக்கின்றன என்பது, மர்மமாகவே உள்ளது. சீனாவின் நிலை இதற்கு எதிர்மறையாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த மூன்று நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவருவதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply