புதுடெல்ல: இந்திய ஜவுளி மற்றும் ஆடை மார்க்கெட், 14 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச ஆடை கூட்டமைப்பு (ஐஏஎப்), ஆடை தயாரிப்பு நிறுவன சங்கம் சார்பில் 25வது உலக ஆடை மாநாட்டை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய ஜவுளி மற்றும் ஆடை மார்க்கெட் மதிப்பு ரூ.1.88 லட்சம் கோடியாக உள்ளது. அது 14 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. ஜேசி பென்னி, நாட்டிகா, டாக்கர்ஸ், பெட் பாத் அண்ட் பியாண்ட், டார்கெட் உட்பட சர்வதேச ஆடை நிறுவனங்கள் இந்திய ஜவுளித் துறையுடன் இணைந்து செயல்படுகின்றன.
வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு, பிராண்ட் இந்தியா ஏற்படுத்துதல், அதன் மூலம் உலக ஜவுளி மற்றும் ஆடை வர்த்தகத்தில் 4 சதவீத இடம் பிடித்தல் ஆகியவற்றை அடைய, ஜவுளித் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
டோக்கியோ, லாஸ் வேகாஸ், ஜுரிச், இஸ்தான்புல், மிலன் ஆகிய நகரங்களுக்கு ஜவுளித் துறை குழுவுக்கு தலைமையேற்று சென்றிருந்தேன். ஜவுளி, ஆடைத் துறை உற்பத்தியில் இணைந்து செயல்பட வருமாறு சர்வதேச முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். எனது அழைப்புக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதன் பலன்கள் விரைவில் தெரிய வரும். இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி ரூ.1.03 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் அது 4 மடங்கு அதிகரித்து ரூ.4.23 லட்சம் கோடி முதல் ரூ.4.7 லட்சம் கோடியாக இருக்கும்.
புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய மார்க்கெட்களை கண்டறிவது உடனடி தேவை. புதுமையான தயாரிப்பு மற்றும் பரவலாக்குதல் மூலம் உலக அளவில் இந்திய ஜவுளி மற்றும் ஆடைக்கான சந்தைப் பங்கை உயர்த்த வேண்டும். ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்க ஜப்பான், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு Ôலுக் ஈஸ்ட் பாலிசிÕ மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க அரசு ஊக்குவித்து வருகிறது.
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைய, வேலைவாய்ப்பு உருவாக்கம், கட்டமைப்பு வளர்ச்சி, சுகாதார வசதி ஆகியவை குறைந்தபட்ச தேவைகள். அவற்றை ஏற்படுத்துவதில் தொழில் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப ஜவுளி (டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ்) முக்கிய பங்கு வகிக்கும். சர்வதேச அளவில் தொழில்நுட்ப ஜவுளி பயன்பாடு 22 சதவீதமாக இருக்க, இந்தியாவில் அது 4 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அமைச்சர் தயாநிதி மாறன் பேசினார்.
Leave a Reply