பிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
18-11-2009 அன்று “நம் மவுன வலி யாருக்கு தெரியப் போகிறது?” என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?
ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,
’’எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா! எங்கு சென்றாய்?”
மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு இரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அன்று தெரிவித்தவர்தான் அவர்.
பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-
* இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.
* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.
* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.”
இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.
அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே;
தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!’’என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Leave a Reply