புதுடில்லி : எல்.ஐ.சி.,ஏஜன்ட்களுக்கு வழங்கப்படும் கமிஷன் முறையை மாற்றி, அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.
எல்.ஐ.சி., (திருத்தப் பட்ட) மசோதா 2009ல், இந்த புதிய திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா லோக்சபாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் 14 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள். எல்.ஐ.சி., ஏஜன்ட்களுக்கு தற்போது, கமிஷன் வழங்கும் முறையை மாற்றி, வாடிக்கையாளர்கள் ஏஜன்ட்களுக்கு கட்டணம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவது, அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகின்றனர். எனவே, இந்த புதிய திட்டத்தை எதிர்த்து, ராஜமுந்திரி மண்டலத்தை சேர்ந்த எல்.ஐ.சி., ஏஜன்ட் கள் சார்பாக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள வக்கீல் சி.பி.என். பாபு கூறியதாவது: இந்த புதிய திட்டம் எல்.ஐ.சி., ஏஜன்ட்களின் தொழிலை பாதிக்கும். மக்களை இன்சூரன்ஸ் போடச் செய்வதே மிகவும் கடினமாக இருக்கும் போது, அவர்களிடம் கட்டணம் கேட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும். மேலும், ஏஜன்ட்கள் இடையே ஏற்படும் போட்டியால், அவர்கள் இடையே ஏற்படும் கட்டண குறைப்பால், ஏஜன்ட்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவர். எனவே, இந்த புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு பாபு கூறினார்.
Leave a Reply