ரிசர்வ் வங்கி விதிகளை மீறும் அரசு துறைகள் : செக் பரிவர்த்தனைக்கு ‘சிக்கல்’

posted in: மற்றவை | 0

tblfpnnews_41631281376கோவை : அரசு “செக்’குகளில் எம்.ஐ.சி.ஆர்., எண் இல்லாததால், வங்கிகளில் விரைவாகவும், துல்லியமாகவும் “செக்’குளை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பணப்பரிமற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் “செக்குகள்’ எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும், என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி வரையறை செய்துள்ளது. “செக்’கின் இடது பக்கத்தில் கீழ், எம்.ஐ.சி.ஆர்., எண் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.ஐ.சி.ஆர்., என்பது, “மேக்னட்டிக் இங்க் கேரக்டர் ரெககனைசர்’ என அழைக்கின்றனர். இதையே, மேக்னட்டிக் இங்க் கோடு ரெககனைசர்’ எனச் சொல்வதும் உண்டு. ஒன்பது இலக்க இந்த எண், செக் எண்ணிற்கு முன்பாகவோ, அடுத்தோ வரும். இந்த எண்ணைக்கொண்டு, வங்கி கிளை எந்த மாவட்டத்தில், எந்த இடத்தில், எந்த வங்கி என்பதை எளிதாக அடையாளம் காட்டும். விரைவாக இயந்திரங்கள் மூலமாக “செக்’குகளை பிரித்து, எளிதாக வகைப்படுத்த உதவியாக இந்த எண் இருக்கும். போலி “செக்’ ஏதாவது இருந்தாலும் உடனடியாக இயந்திரமே நிராகரித்து விடும். வங்கிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயாக்கப்பட்டு, உடனுக்குடன் பணப்பரிமாற்றத்தை செய்யவும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எந்த கிளையில் வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யவும் முடியும். நவீனமயாக்கப்பட்ட பிறகு, இந்த எம்.ஐ.சி.ஆர்.,எண் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

கலெக்டர் கூட்டத்திலும் கண்டிப்பு: கோவையில் “செக்’குகளை கிளியரிங் செய்யும் பொறுப்பை, பாங்க் ஆப் பரோடா செய்து வருகிறது. திருப்பூரில் ஸ்டேட் பாங்க்கும், ஈரோட்டில் பஞ்சாப் நேஷனல் பாங்க்கும் மேற்கொண்டு வருகின்றன. ரிசர்வ் பாங்க், ஒவ்வொரு வங்கிக்கும் இது போன்ற பணிகளை பிரித்து பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோவையில் இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் பாங்க் ஆப் பரோடா வேண்டுகோள் விடுத்தது. கலெக்டர் தலைமையில் பாங்க்குகள் பங்கேற்கும் வளர்ச்சி மன்ற கூட்டத்திலும், அனைத்து வங்கிகளும் ரிசர்வ் பாங்க் விதிமுறையை கடைபிடிக்க “எம்.ஐ.சி.ஆர். எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. டிச.,1 முதல் இவற்றை அமல்படுத்த தீவிரம் காட்டியது. எந்த வங்கியாவது, எம்.ஐ.சி.ஆர்.,எண் குறிப்பிடாத செக்குகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருந்தால், அவற்றை திரும்ப பெற்றுக் கொண்டு, எண் அச்சடிக்கப்பட்ட “செக்’குகளை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அரசு துறைகளால் பிரச்னை: கிராமப்புற வங்கிகளுக்கும் இந்த எம்.ஐ.சி.ஆர்., எண்கள் அளிக்க வலியுறுத்தினர். இந்த எண் இல்லாத “செக்’, பெரும்பாலும் அரசு துறையிலிருந்தே வருகின்றன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஐ.சி.ஆர்., எண் குறிப்பிட வேண்டும் என கூறியும், இவை அச்சிடப்படவே இல்லை. வங்கிகள் அளிக்கும் செக் தவிர, அரசு கருவூலம், புதிய செக்குகளை அளிக்கின்றன. இந்த “செக்’குகளில், எம்.ஐ.சி.ஆர்., எண் இருப்பதில்லை. தரமான தாளில் அச்சிடப்படுவதில்லை. ரிசர்வ் பாங்க் அளித்துள்ள வரைமுறைப்படி இவை இருப்பதில்லை. இவ்வாறு அளிக்கப்படும் செக்குகளால், போலியான “செக்’ ஊடுருவ அதிக வாய்ப்புகள் உள்ளதாக “கிளியரிங்’ செய்யும் வங்கிகள் கண்டிப்பு காட்டி வருகின்றன.

விதிமுறைகள் மீறல்: கோவையில் “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’விலிருந்து, இது போன்ற “செக்’ வருவதுண்டு. ரிசர்வ் பாங்க் விதிமுறைப்படி “செக்’ வெளியிடுவது வங்கியின் கடமை. ஆனால், அரசே அச்சிட்டு கொடுக்கும் செக்கை “ஸ்டேட் பாங்க்’ ஏற்றுக்கொண்டு, பண பரிவர்த்தனை செய்கிறது. அரசு செக் என்பதால், “எம்.ஐ.சி.ஆர்.,’ எண் இல்லாத செக்குகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு இருந்து வருகிறது. இந்த “செக்’குகளை ஏற்றுக் கொள்ள முடியாது என எந்த வங்கியும் மறுக்க முடியவில்லை. திட்டங்களை முன்னோடியாக செயல்படுத்த வேண்டிய அரசே, ரிசர்வ் வங்கியின் விதிமுறையை மீறி, அலட்சியப்படுத்துவது முரண்பாடாக உள்ளது. நாட்டின் நிதி நிர்வாகத்தையும், பொருளாதாரத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உண்டு; வங்கிகளுக்கும் உண்டு. இது குறித்து அரசுடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், “சேவையை விரைந்து செய்யவும், துல்லியமாக செயல்படவும் இந்த எண் கேட்கப்படுகிறது. இதை பிரிண்ட் செய்து கொடுக்க வேண்டியது வங்கிகளின் கடமை. அரசே அளிக்கும் செக், விதிமுறையை மீறி, வரைமுறையின்றி கொடுத்தால், யாரிடம் புகார் செய்ய முடியும்? இதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *