ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை தேசிய விருதுகள் நேற்று டில்லியில் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 52 விருதுகளில் தமிழகத்துக்கு மட்டும் 9 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த மறுவாழ்வு அளித்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
அதை முன்னிட்டு,இந்தியாவில் ஊனமுற்றோருக்காக சிறப்பாக சேவை செய்தவர்களை யும், சாதனை படைத்த ஊனமுற்றோரையும் ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுகின்றன.ஊனமுற்றோருக்கு சிறந்த மறுவாழ்வு அளித்ததில், சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஓராண்டில் சேலம் மாவட்டத்தில் ஊனமுற்றோர் நலத்துறை சார்பில் அதிக பயனாளி களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டிருப்பதும் தேர்வுக்கு முக்கிய காரணமாக கருதப் படுகிறது.சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், ஊனமுற்றோர் உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது; ஊனமுற்றோர் நல அலுவலர் ஜோசப் டி.ரவி, கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், இவ்விருது கிடைக்க காரணமாக இருந்துள்ளன.
கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ஊனமுற்றோர் நல அலுவலராக பணிபுரிந்த ஜோசப் டி.ரவி தற்போது, திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணி மாறுதலில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஊனமுற்றோருக்கு தடையற்ற சூழலை ஏற்படுத்தியமைக்காக சென்னை மாநகராட்சிக்கும், தேசிய அறக்கட்டளையின் கீழ் உள்ளூர் அளவில் குழுக்கள் மூலம் அதிக அளவு பாதுகாவலர் சான்றிதழ் வழங்கிய வகையில் திருநெல்வேலி மாவட்ட உள்ளூர் கமிட்டியும், ஊனமுற்றோருக்கான பொருளாதார மேம்பாட்டுக்காகவும்,
சுய வேலை வாய்ப்புக்காகவும் அதிக தொகை கடன் வழங்கிய வங்கியாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. டில்லியில் நேற்று நடந்த விழாவில், விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
Leave a Reply