பணி நேரத்தில் சொந்த வேலை பார்க்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒழுங்குபடுத்த, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்துள்ளது, பள்ளி கல்வித்துறை. இதே போன்ற உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். ஒரு சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளி பணிக்கு வருவதில்லை; விடுப்பு எடுத்தால் அது குறித்து தெரிவிப்பதுமில்லை.ஆசிரியர் விடுப்பு எடுத்தால், விடுப்புக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்தால் அது குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை, என்ற நிலை உள்ளது. விடுப்பு எடுக்கும் தலைமை ஆசிரியர், விண்ணப்பம் எழுதி பள்ளி அலுவலகத்தில் பராமரித்து வந்தால் போதுமானது.
இதனால், சொந்த வேலையாக வெளியில் செல்லும் சில தலைமை ஆசிரியர்கள், விடுமுறை விண்ணப்பத்தை எழுதி அலுவலகத்தில் வைத்துச் செல் கின்றனர். மாலையோ, மறுநாளோ மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். தாங்கள் பணியில் இல்லாத நேரத்தில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கு வரவில்லை, என்பதை உறுதி செய்து கொள் கின்றனர்.அதன் பின், தாங்கள் முன்பு எழுதி வைத்திருந்த விடுமுறை விண் ணப்பத்தை கிழித்து போட்டு, வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விடுகின்றனர். சில தலைமை ஆசிரியர்கள் செய்யும், முறைகேடான செயல்களால் நேர்மையாக பணிபுரியும் பிற தலைமை ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை பறந்தது.
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமை ஆசிரியர் பிற ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும். பள்ளியின் பொறுப்புகளை உதவி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்த பிறகே விடுப்பில் செல்ல வேண்டும்.தலைமை ஆசிரியர் இல்லாத நேரத்தில், உதவி தலைமை ஆசிரியர் பள்ளியை சிறப்பாக கண்காணிக்க வேண்டும். எக்காரணத்தை கொண் டும் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறக் கூடாது. இந்த நடைமுறையை பின்பற்றாவிட்டால், தலைமை ஆசிரியர் மீதும், உதவி தலைமை ஆசிரியர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் காலை சரியாக 8.30 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும். மாலை 5.45 மணி வரை பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மேலும், மறுநாள் விடுமுறை எடுக்க விரும்பும் தலைமை ஆசிரியர்கள், முந்தைய நாளே “இ-மெயில்’ மூலம் விடுமுறை விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்’ என்றும், கிடுக்கிப்பிடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் “டிமிக்கி’ தந்து வந்த சில தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலரின் இந்த அதிரடி உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர். இதே போன்ற உத்தரவை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply