அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்

posted in: கல்வி | 0

திருச்செங்கோடு: கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை, முன்னாள் மாணவர் தத்தெடுத்துக் கொண்டார்.

பள்ளியில் அனைத்து வசதியும் ஏற்படுத்துவதாக அவர் உறுதி அளித்தார்.

திருச்செங்கோடு அடுத்த கொக்கராயன்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இப்பள்ளி, கடந்த 2001-2002ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 425 மாணவர்கள், 395 மாணவியர் என மொத்தம் 820 பேர் படித்து வருகின்றனர்.

மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் குளம் போல் பள்ளி முன் தேங்குவதால், சேரும், சகதியை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலமும் உள்ளது. அதனால், காலையில் வெள்ளை உடுப்பில் வரும் மாணவர்கள், மாலையில் வீட்டுக்கு திரும்பும் போது கலர் உடுப்பில் செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் பொன்னுசாமி. இவர் பள்ளியின் இன்றைய நிலை குறித்து அறிந்து வேதனை அடைந்தார். தனக்கு கல்வி அறிவு புகட்டிய பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் உதித்தது.

அவர் சென்னையில் பிரபல கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சகோதரர் கண்ணையன் பள்ளியின் பி.டி.ஏ., தலைவராக இருந்துள்ளார். அவரது நினைவாக பொன் பியூர் சேரிட்டரீஸ் மூலம் பள்ளியை தத்தெடுக்க விரும்பினார். அதை தொடர்ந்து விமான பயணத்தில் சந்தித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கவுரவ ஆலோசகருமான விஜயகுமாரிடம் தனது மனதில் எழுந்து எண்ணத்தை எடுத்துரைத்தார்.

அதைக்கேட்ட அதிகாரி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், தமிழகத்தில் பள்ளி வளர்ச்சித் திட்டம் வைத்திருப்பதாகவும், பல மாவட்டங்களில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பள்ளிகளை தத்தெடுத்து முழுமையாக பராமரித்து வருவதையும் விளக்கினார். கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பொன்னுசாமி உறுதி அளித்தார்.

அதன்படி கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை தத்தெடுக்கும் நிகழ்ச்சியும், மாவட்ட கல்வித்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்த விழாவும் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட கவுரவ ஆலோசகர் விஜயகுமார் தலைமை வகித்தார். சி.இ.ஓ., மல்லிகா, டி.இ.ஓ., ஜெயலட்சுமி, வித்யா விகாஸ் கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சிங்காரவேல், பழனியப்பன், ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அன்பரசன், பி.டி.ஏ., தலைவர் முருகேசன், தத்தெடுத்த முன்னாள் மாணவரின் சகோதர்கள் கந்தசாமி, சின்னையன், சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து முன்னாள் மாணவர் பொன்னுசாமி கூறியதாவது: கடந்த 1960ம் ஆண்டுகளில் எனக்கு கல்வி அறிவை ஊட்டியது இப்பள்ளி. தற்போது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போதும் போதிய வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவியர் அவதிப்படுவதை அறிந்தேன். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பள்ளியை தத்தெடுத்தேன். கிராமப்புற மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் பெற்று கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது ஆசை.

அதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டு போடிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் வகையில், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். மாணவ, மாணவியருக்கு போதிய வகுப்பறை கட்டடங்கள், நவீன ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கருவிகள் என அனைத்தும் ஏற்படுத்தி அவர்களின் முன்னேற்றத்தில் முழுக்கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *