11 நாட்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ் : தனி தெலுங்கானா உருவாக்க மத்திய அரசு சம்மதம்

posted in: அரசியல் | 0

tblfpnnews_88940066100புதுடில்லி : ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் தெரிவித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. இதையடுத்து, சந்திரசேகர ராவ் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.,) தலைவர் சந்திர சேகர ராவ், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமானது. உடனே, ஆந்திர முதல்வர் ரோசய்யா டில்லி விரைந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்துப் பேசினார். மாநில நிலவரம் குறித்து விவாதித்தார். இதையடுத்து, காங்., உயர்மட்டக் குழு நேற்றிரவு கட்சித் தலைவர் சோனியா தலைமையில் கூடி ஆலோசித்தது. பின்னர், ஆந்திர முதல்வர் ரோசய்யா மற்றும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின், நள்ளிரவில் அமைச்சர் சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவக்கப்படும். தெலுங் கானா தொடர் பாக, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற் றவும், மாநில அரசுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும்படி, ஆந்திர அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உண்ணாவிரதம் மேற் கொண்டுள்ள சந்திர சேகர ராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் தனது போராட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களும் தங்களது போராட்டங் களை கைவிட்டு, சகஜநிலை ஏற்பட அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற் கொள்வதாக முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார் என்றார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால், தெலுங் கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

“ஆந்திர மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. பார்லிமென்டிலும் இதுதொடர்பான மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும்’ என, டி.ஆர். எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் மகன் ராமராவ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “” கடந்த 400 வருடங்களாக இந்தப் பிராந்தியத்தின் தலைநகராக ஐதராபாத் உள்ளது. இந்த நகரம் இல்லாத தனி மாநிலத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் ,” என்றார். இவரின் அறிவிப்பை தொடர்ந்து சந்திரசேகர ராவ் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

முன்னதாக, சந்திரசேகர ராவுக்கு ஆதரவாக நேற்று, ஐதராபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்களும், பேராசிரியர்களும் பல்கலை வளாகத்துக்குள் இருந்தவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சந்திரசேகர ராவின் உடல்நிலை மோசமானதாக தகவல் வெளியானதை அடுத்து, அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மாணவர்களை வெளியேற்றுவதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற் கொண்டனர். நூற்றுக்கணக்கான போலீசார் பல்கலை வளாகத்திற்குள் இருந்த மாணவர்களை வெளியேற்றினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் தலைவர் ஐந்து பேர் உட்பட 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற மாணவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

ஐதராபாத் போலீஸ் கமிஷனர் பிரசாதா ராவ் கூறுகையில், “பல்கலைக்கு தொடர்பில்லாத சில வெளி நபர்கள், மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அவர்களை எச்சரித்தோம். இதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்’ என்றார். இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஏ.பி.வி.பி., அமைப்பைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், ஆந்திர சட்டசபையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்; சிலர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் இந்த போராட்டங்கள் காரணமாக, நேற்று ஐதராபாத் நகரம் போர்க்களம் போல் காணப்பட்டது. தவிரவும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், போராடும் மாணவர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்குவதாகக் கூறி பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சட்டசபை ஒத்தி வைப்பு: டி.ஆர்.எஸ்., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அமளியில் ஈடுபட்டதால், நேற்றும் ஆந்திர சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *