சொத்து மதிப்பு உயர்வில் இந்தியர்கள் முதலிடம்

bs210மும்பை : கடந்த 6 மாதங்களில் தங்களது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக 68 சதவீத இந்திய முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நமக்கு கடும் போட்டியாக உள்ள சீனாவில் இது வெறும் 46 சதவீதம்தான்.


கடந்த ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பள வெட்டு, பங்குச் சந்தை சரிவு ஆகிய காரணங்களால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சரிந்தது. எனினும் பொருளாதாரம் சீரடைந்து வருவதால், இப்போது உயர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பு உயர்வு குறித்து எச்எஸ்பிசி ஒரு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:
நிதி நெருக்கடிக்குப் பிறகு ஆசிய நாடுகளின் முதலீட்டாளர்கள் சொத்து மதிப்பு சராசரியாக இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது, இப்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக 68 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆசிய கோடீஸ்வரர்களில் 70 சதவீதம் பேர் சீனர்களாக இருந்தாலும், அவர்களில் 46 சதவீதம் பேர் மட்டுமே சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தைவானில் 61 சதவீதம் பேரும், மலேசியாவில் 55 சதவீதம் பேரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் வேலை மூலம் கிடைக்கும் வருமானம் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை அதிகபட்சமாக சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 89 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதற்கு அடுத்தபடியாக, இந்தோனேசியா (87), தைவான் (84), இந்தியா (79) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சொத்து மதிப்பு உயர்வில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தையே சீனா பிடிக்க முடிந்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *