சரணடையும் புலிகளை கொல்ல ராஜபக்சே தம்பி உத்தரவிட்டாரா

posted in: உலகம் | 0

wl103கொழும்பு : “சரண் அடையும் விடுதலை புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்ல அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவிட்டார்“ என்ற திடுக்கிடும் தகவலை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டார்.

முன்னாள் ராணுவ தலைமை தளபதியும் அதிபர் தேர்தல் எதிர்க் கட்சி வேட்பாளருமான சரத் பொன்சேகா ‘சன்டே லீடர்‘ என்ற பத்திரிகைக்கு பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் கடைசி நாட்களில் என்னுடன் இலங்கை அரசு எந்த தகவலும் பரிமாறிக் கொள்ள வில்லை. என்னை புறக்கணித்து விட்டனர். அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகர் பசில் ராஜபக்சா, அதிபரின் தம்பியும் ராணுவ அமைச்சருமான கோதபயா ராஜபக்சே ஆகியோர் வெளிநாட்டு தூதர்கள் மூலம் விடுதலை புலிகள் தலைவர்களுக்கு தகவல் அனுப்பினர். “வெள்ளைக் கொடி ஏந்தி வந்து சரண் அடையும் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படும்“ என்று தூது விட்டனர்.

அதே சமயம், “சரண் அடையும் புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். யாரையும் உயிருடன் விடக் கூடாது“ என்று பிரிகேடியர் ஷாவேந்திர சில்வாவுக்கு கோதபயா ராஜபக்சே உத்தரவிட்டார். அதன்படி வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், புலிகளின் அமைதி செயலக தலைவர் புலித்தேவன், புலிகளின் மூத்த தளபதி ரமேஷ் ஆகிய 3 பேரும் வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வந்தபோது கோதபயா ராஜபக்சே உத்தரவுப்படி அவர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் எனக்கு தெரியாது. என்னிடம் இருந்து மறைத்து விட்டனர். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.பொன்சேகாவின் பேட்டி வெளியானதை தொடர்ந்து இலங்கை பேரிடர் நிர்வாகம் மற்றும் மனித உரிமை விவகாரத்துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே அவசரமாக பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் அவர் கூறும்போது, “ பொன்சேகா வெளியிட்ட தகவல் கறை படாத இலங்கை ராணுவத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர் செய்தது மிகப்பெரிய துரோகம்“ என்றார். பேட்டியின் போது மேலும் 2 அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *