புதுடெல்லி : ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நான்காவது நாளாக நடக்கும் போராட்டத்தால் ஆந்திராவில் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பந்த் நடத்தப்பட்டு வருகிறது. 4வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. கட்சி வேறுபாடு இல்லாமல், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் ஆந்திர மாநிலம் ஸ்தம்பித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தை எதிர்த்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் கட்சிகளை சேர்ந்த 138 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சட்டப்பேரவை, அமளி காரணமாக நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை பேரவை கூடியதும், ‘ஆந்திராவை பிரிக்க விடமாட்டோம்’ என்று அனைத்து கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் கிரண் குமார் ரெட்டி அறிவித்தார்.
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் அங்கு ஜனாதிபதி ஆட்சி வரும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இது பற்றி, டெல்லியில் நேற்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், ‘‘ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அது பற்றி சிந்திப்பதே முட்டாள்தனம். முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி ரோசய்யாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக வெளியாகும் செய்திகளிலும் உண்மை இல்லை. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணப்படும். தெலங்கானா மாநிலம் இப்போது அமையுமா என்பது பற்றி கூற முடியாது’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி. கைது: தெலங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. லகடபாடி ராஜகோபாலும் ராஜினாமா செய்துள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் நிருபர்களை சந்தித்த அவர், ‘தெலங்கானா மாநிலம் தொடர்பாக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தால் அது தோல்வியடையும். ஐதராபாத் என்பது தாய் போன்றது, மற்ற மாவட்டங்கள் அதன் பிள்ளைகள். எனவே தாயையும், பிள்ளைகளையும் பிரிக்கக் கூடாது. தெலங்கானாவை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ரோசய்யாவை சந்தித்து பேசுவேன்Õ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் ஐதராபாத் வந்த அவரை, விமான நிலையத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், முதல்வர் ரோசய்யாவை ராஜகோபால் சந்தித்து பேசினார்.
Leave a Reply