தெலுங்கு தேசத்துடன் மாஜி முதல்வர் மகன் ஜெகன் கைகோர்ப்பு : சோனியா முடிவை எதிர்த்து அதிர்ச்சி திருப்பம்

posted in: அரசியல் | 0

tblfpnnews_46341669560தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பை எதிர்த்து, காங்., எம்.பி.,யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி, போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் லோக்சபாவில் நேற்று அவர், தெலுங்கு தேசம் கட்சியினருடன் கைகோர்த்து செயல்பட்டது, காங்கிரஸ் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று லோக்சபா துவங்கியதும், சபாநாயகர் மீரா குமார் கேள்வி நேரத்தை மேற்கொள்ள துவங்கினார். அப்போது, தெலுங்கு தேசம் எம்.பி.,க்களான நாராயணா, சிவபிரசாத், வேணுகோபால் ரெட்டி, நிம்மல கிருஷ்ணப்பா ஆகியோர் எழுந்து, தெலுங்கானா பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இவர் களை சமாதானப்படுத்திய சபாநாயகர் மீரா குமார்,கேள்வி நேரம் முடிந்ததும் பேச வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தார். கேள்வி நேரம் துவங்கி நடைபெற்று முடிந்தது. பின், ஜீரோ நேரம் துவங்கியவுடன் மீரா குமார், நாராயணாவுக்கு பேசவாய்ப்பு அளித்தார். அப்போது பேசிய நாராயணா, “ஆந்திராவை பிரிக்கக் கூடாது. ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த கோரிக்கையான இதை வலியுறுத்திய ஒரு எம்.பி.,க்கு மிகப்பெரிய அவமானம் நடந்துள்ளது. ராஜகோபால் என்ற எம்.பி.,யை நேற்று போலீசார் கைது செய்து, மிரட்டியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. ஆந்திராவை பிரிக்கக் கூடாது,’ என்று பேசிக் கொண்டு இருக்கும் போது, அவையில் இருந்த தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர், எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

கைகோர்ப்பு: தெலுங்கு தேசம் எம்.பி.,க்களும், தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கோஷங்கள் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், யாரும் எதிர்பாராத திருப்பம் சபையில் நடந்தது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்., எம்.பி., யுமான ஜெகன்மோகன் ரெட்டி எழுந்து தெலுங்குதேசம் எம்.பி.,க்களுடன் கைகோர்த்தார். சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுடன் கைகுலுக்கி அவர்களுடன் சேர்ந்து, ஒன்றுபட்ட ஆந்திரா வேண்டும் என்று ஜெகன்மோகன், குரல் கொடுத்தார். ராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட ஜெகனின் ஆதரவு காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும், தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுடன் சேர்ந்து தெலுங்கானா எம்.பி.,க்களை எதிர்த்தனர். ஆந்திர காங்கிரஸ் எம்.பி.,க்கள் இரு பிரிவாக பிரிந்து நின்று தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் வைத்திருந்த அட்டையை ஜெகன் வாங்கி, உயர்த்திப் பிடித்து ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று கூறியபடி நின்றிருந்தார். இவருக்கு ஆதரவாக எம்.பி.,க்களும் புடைசூழ நின்றிருந்தனர்.

காங்கிரஸ் தரப்பில் கிடைத்த எதிர்பாராத ஆதரவைப் பார்த்து தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் மேலும் வலுவாக கோஷங்கள் இட்டபடி நின்றனர். இரு தரப்பும் ஏற்படுத்திய கூச்சலை அடுத்து சபை அரை மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின், சபை கூடியபோது ஜெகன் மற்றும் ஆதரவு எம்.பி.,க்களும் தெலுங்கானா ஆதரவு எம்.பி.,க்களும் வரவில்லை. தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள் மட்டும் வந்திருந்தனர். இவர்கள் மீண்டும், தெலுங்கானா விவகாரத்தை கிளப்பினர். தெலுங்கானா அறிவிப்பை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *