திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கலமசேரியில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபியா மதானி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவ முக்கிய கட்சிகள் மறுத்து விட்டன.
இதையடுத்து கொல்லம் மாவட்டம் அன்வர்சேரியில் உள்ள வீட்டில் மதானியும், அவரது மனைவியும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். அவர்களது கட்சித் தொண்டர்கள் வீட்டுப் பகுதியில் குழுமியுள்ளனர்.
சுபியா கைது செய்யப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, அதிகாரிகள்தான் பொறுப்பு என்று மதானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களி்ல் மதானிக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு தெரிவித்த ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் தற்போது மதானியைக் கைவிட்டுள்ளன.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி தடியந்தவிட நஸீர் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் கலமசேரியில் தமிழகப் பேருந்தைத் தீவைத்துக் கொளுத்த உத்தரவிட்டது சுபியாதான் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்தே நான்கு ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள அந்த வழக்கில் சுபியாவை சமீபத்தில் கேரள போலீஸார் சேர்த்தனர்.
அந்த சம்பவம் நடந்தபோது மதானி கோவை சிறையில், குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக அரசை எச்சரிக்கும் வகையில், இந்த பஸ் எரிப்புச் சம்பவத்தை மதானி கட்சியினர் நடத்தினர்.
தற்போது மதானி விடுதலையாகி விட்டபோதிலும், நஸீர் கொடுத்துள்ள வாக்குமூலம் இந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் பல்வேறு சதிச் செயல்கள் புதைந்திருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளதால் மறுபடியும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.
கைதைத் தவிர்க்க சுபியா முன்ஜாமீன் கோரகி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அது இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் மதானி கட்சியுடன் தோழமை என்பதே கிடையாது என்று முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற அமைப்புகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிர்காலத்தில் கூட மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவற்றுடன் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி இணைந்து பணியாற்றும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியினரும், மதானியுடன் கூட்டணியோ, தோழமையோ கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்
Leave a Reply