வந்தவாசி: தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி, தேர்தல் கமிஷன் சாதனை செய்துள்ளது.
இதுவரை நடந்த அனைத்து தேர்தலிலும் மத்திய, மாநில அரசு ஊழியர்களை மட்டுமே தேர்தல் கமிஷன் பயன்படுத்தி வந்தது. இந்த இடைத் தேர்தலில் புது முயற்சியாக கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட 217 ஓட்டுச் சாவடிகளிலும் “லேப்-டாப்’ உடன், கல்லூரி மாணவர் ஒருவர் பணியில் இருப்பார். ஓட்டளிப்பவர்கள் வரும் போது அவர்களை போட்டோ எடுத்து, ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ள போட்டோவை சரிபார்த்து, இரண்டும் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களை ஓட்டளிக்க அனுமதிப்பார்கள். பூத்தில் உள்ள வெப்- கேமராக்களை இயக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள்.
இதற்காக திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மூன்றாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் 217 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஓட்டுப் பதிவு மையங்களில் கம்ப்யூட்டரை இயக்கும் முறை குறித்து ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சி முடித்த கல்லூரி மாணவர்களுக்கு, வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மாலை “லேப்-டாப்’ மற்றும் உபகரணங்களை கலெக்டர் ராஜேந்திரன், டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் வழங்கினர். இவர்கள் அனைவரும் நேற்று மாலையே அந்தந்த ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Leave a Reply