புதுடில்லி:”காங்., தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராகுல் இடம் பெற வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக, இந்த ஆண்டின் சிறந்த அரசியல் தலைவருக்கான விருது, தனியார் ஆங்கில “டிவி’ சேனல் சார்பில் காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு வழங்கப்பட்டது.
பிரதமர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமரால் ராகுலுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ராகுல் செல்ல வேண்டியிருந்ததால் அவர் பங்கேற்கவில்லை.
விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:மத்திய அமைச்சரவையில் காங்., பொதுச் செயலர் ராகுல் இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக நான் பலமுறை முயன்றேன். ஆனால், அதில் வெற்றி கிட்டவில்லை. கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ராகுல் செய்திருக்கிறார். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும், இந்தியாவில் அத்தகைய ஒரு நெருக்கடி ஏற்படவில்லை என்றார்.
Leave a Reply