ராஞ்சி, : ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தொங்கு சட்டப் பேரவை ஏற்பட்டுள்ளது. சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரசும் பா.ஜ.வும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.ஜார்கண்ட் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில் காங்கிரஸ் & ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (ஜே.வி.எம்.) ஒரு அணியாகவும் பா.ஜ.&ஐக்கிய ஜனதா தளம் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி அமைத்தும் ஜே.எம்.எம். கட்சி தனித்தும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு மாலையில் எல்லா முடிவுகளும் வெளியாயின. காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும் பா.ஜ. அணி 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சிபுசோரனின் ஜே.எம்.எம். கட்சி 18 இடங்களை கைப்பற்றியுள்ளது.
முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனைவி கீதா கோடா ஜகந்நாத்பூர் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் இனோஸ் இக்கா, கொலிபெரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டி, மற்றொரு முன்னாள் துணை முதல்வரும் ஜே.எம்.எம். மூத்த தலைவருமான சுதிர் மகாதோ, காங்கிரசைச் சேர்ந்த சபாநாயகர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
காங்கிரஸ், பா.ஜ. தீவிரம்: மெஜாரிட்டி இல்லாத நிலையில், சிபுசோரனின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. லாலு பிரசாத்தின் கட்சி ஐ.மு. கூட்டணியில்தான் உள்ளது என்றும் சிபுசோரன் எங்கள் குடும்ப உறுப்பினர் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். இந்த கூட்டணிக்கு லாலு பிரசாத்தும் ஆதரவு கொடுக்க தயாராக உள்ளார். மதச்சார்பற்ற கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சிபுசோரனுடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.வும் முயற்சிக்கிறது. சிபுசோரனுடன் பேசத் தயார் என்று பா.ஜ.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மதவாத சக்திகளை மக்கள் புறக்கணித்து விட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. சிபுசோரன் நிபந்தனை: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு இருந்தால்தான் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், முதல்வர் பதவிக்கு சிபுசோரனை ஏற்கும் கட்சிக்குத்தான் ஆதரவு அளிப்போம் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
Leave a Reply