சாய ஆலைகள் ஸ்டிரைக்: 3 நாளில் ரூ.100 கோடி உற்பத்தி பாதிப்பு

1377026திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் சாய ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டத்தால், சாய ஆலைகள் மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்களில், கடந்த மூன்று நாளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட மூலதன செலவை ஈடுசெய்யும் வகையில், அரசு சார்பில் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. மானியம் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தி வருகின்றன. கோர்ட் உத்தரவுப்படி, அபராதத் தொகை நிலுவையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலை காப்பாற்ற மானிய உதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி, சாய ஆலைகள் கடந்த 25ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

திருப்பூர் பகுதியில் உள்ள 725 சாய ஆலைகளில், தனியாருக்கு சொந்தமான சாய ஆலைகள் நீங்க, மற்ற சாய ஆலைகளில் வேலை நிறுத்தம் நீடிக்கிறது. சாய ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களில், 85 சதவீதம் பேர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்; வேறுதொழில் அறியாதவர்கள். இதனால், வேலை நிறுத்தத்தால் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். சாய ஆலைகள் வேலை நிறுத்தத்தை துவங்கியதில் இருந்தே, சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், கெமிக்கல் வர்த்தகம் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சாய கெமிக்கல் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட் வழங்கிய கால அவகாசம், வரும் 5ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆலைகளை துவக்கினாலும், அடுத்த சில நாட்களுக்குள் பெரும் தொகையை கோர்ட்டில் செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய காரணங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே, ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுள்ள நிலைக்கு, அரசுகளின் மானிய உதவியே தொழிலுக்கு பெரிதும் கைகொடுப்பதாக இருக்கும். அரசுகளின் மானியத்தை பெற வேண்டுமென்ற ஒரே நோக்கில், இன்று சாய ஆலை உரிமையாளர்கள் கரம் கோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சாயத்தொழில் மற்றும் அதில் நேரடியாக தொடர்புடைய தொழில்கள் பாதிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் சாமியப்பனிடம் கேட்டபோது,”சாய ஆலைகள் ஸ்டிரைக் காரணமாக, 70 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சாய ஆலைகள் இயங்காததால், அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கிறது. பனியன் தொழிலில் பங்கேற்றுள்ள நிறுவனங்களும் தார்மீக ஆதரவு தெரிவித்து, ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தன. இதனால், ஒட்டுமொத்தமாக இதுவரை 100 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தொழிலாளர்கள் நலன் கருதியாவது, அரசு விரைவில் நல்லதொரு அறிவிப்பை வெளியிடுமென எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

திருப்பூர் மேம்பாட்டு கழகத்துக்கும் நஷ்டம்: திருப்பூர் பகுதியில் வெளியேறும் கழிவு நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருந்ததால், உப்புத்தன்மை குறைந்த காவரி ஆற்று நீரை வழங்குவதற்காக, தமிழக அரசு சார்பில் மூன்றாவது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம், சாய ஆலைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குடிநீர் வழங்கி வருகிறது. சாய ஆலைகளுக்காக துவக்கப்பட்ட இத்திட்டத்தில், சாய ஆலைகளுக்கு மட்டும் தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதற்காக, ஆயிரம் லிட்டருக்கு 50 ரூபாய் என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே சாய ஆலைகள் இயங்குவதால், வாரத்துக்கு 25 கோடி லிட்டர் அளவுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. சில சாய ஆலைகளில் சொந்த கிணற்றில் இருந்து தண்ணீர் பயன்படுத்துவதால், வாரத்துக்கு 18 முதல் 20 கோடி லிட்டர் வரை மூன்றாவது திட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் தேவை ஏற்படவில்லை. ஏற்கனவே, ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் திருப்பூர் மேம்பாட்டு கழகத்திற்கு, இதனால் மேலும் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *