புதுடில்லி: கல்வித் துறைக்கென்று ஐ.இ.எஸ்., என்ற புதிய சேவையை ஏற்படுத்த முடியுமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சமீபத்தில், பள்ளிக் கல்விக்கான வட்டமேஜை மாநாடு டில்லியில் நடந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல், முன்னாள் மனிதவளத் துறை செயலர் அனில் போர்டியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனில் போர்டியா,கல்வித் துறைக்கு இப்போது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தான் நியமிக்கிறோம். மாறாக இந்தியக் கல்வித் துறை (ஐ.இ.எஸ்.,) என்ற அதிகார பணியை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கபில் சிபல், அவர் தலைமையிலான நிபுணர்கள் குழு அப்படியொரு அதிகார நிலை உருவாக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆலோசிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
மேலும், முன்னாள் கலாசாரத் துறை அமைச்சர் ஜக்மோகன் காலத்தில், அவர் தொல்லியல் துறைக்கான தனி அதிகார நிலையாக இந்தியத் தொல்லியல் துறை (ஐ.ஏ.எஸ்.,) துவக்க முயற்சி செய்து அது நிறைவேறாமல் போனதையும் சுட்டிக் காட்டினார்.
மாநாட்டில் பேசிய போர்டியா,பொதுத் துறை-தனியார் பங்களிப்பில் இரண்டாயிரத்து 500 பள்ளிகள் துவக்கப்படும் என்ற பிரதமரின் திட்டம் இன்னும் செயல்படுத் தப்படாதது பற்றிக் குறிப்பிட்டார். அத்திட்டம் நிறைவேற கஜேந்திர ஹல்தியா, அனிதா ராம்பால், ராகேஷ் பார்தி மிட்டல், ஹர்பல் சிங், மஞ்சு பாரத்ராம் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் பற்றாக்குறையை விரைவில் நீக்குவது குறித்த பிரச்னையில், ஆசிரியர் பயிற்சியை பல்கலைக்கழக அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாநாடு தீர்மானித்தது. அதைச் செயல்படுத்த கிருஷ்ண குமார், அனிதா ராம்பால், அனில் போர்டியா மூவர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Leave a Reply