விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது

posted in: மற்றவை | 0

tblsambavamnews_41553896666ஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் உசேன் (25). இவர், சவுதி அரேபியாவில் உள்ள மெதினா விமான நிலையத்தில், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மெதினாவில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ஏர் – இந்தியா விமானத்தில் யாருக்கும் தெரியாமல், அதிலுள்ள கழிவறையில் மறைந்து கொண்டார்.

விமானம் மெதினாவில் இருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில், அவர் கழிவறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, உசேன் உள்ளே இருப்பது தெரியவந்தது. விமானம் வெள்ளியன்று இரவு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவரிடம் பாஸ்போர்ட்டோ, விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டோ இல்லை என்பது தெரியவந்தது. உடன், ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார், சிறப்பு அதிரடிப் படை போலீசார் மற்றும் ராணுவ உளவுத் துறையினர் ஆகியோர் உசேனிடம் விசாரணை நடத்தினர்.

அதில், விமானத்தில் பயணித்தவர்களுக்கோ அல்லது விமானத்திற்கோ எந்த விதமான ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடு, உசேன் அதில் ஏறவில்லை. மெதினாவில் தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் இருந்து தப்பிக்கவே, இப்படி திருட்டுத் தனமாக விமானத்தில் ஏறியது தெரியவந்தது. இருந்தாலும், இந்த விவகாரம் பெரிய அளவிலான பாதுகாப்பு மீறல் என்பதால், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, மெதினா விமான நிலையத்தில் துப்புரவு பணிகளை கையாளும் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, ஏர் – இந்தியா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. விமானத்தின் கழிவறையில் உசேன் இருப்பது தெரியவந்ததும், அவரால், யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே, விமானத்தை ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்ல அதன் பைலட் தீர்மானித்துள்ளார்.

ஏர் – இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், உசேன் இந்தியாவைச் சேர்ந்தவர். சவுதியில் வேலை பார்த்த நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இப்படி தப்பிக்க முற்பட்டுள்ளார்,” என்றார்.போலீஸ் விசாரணையில் உசேன் மேலும் கூறியதாவது:ஆறு மாதங்களுக்கு முன், நான் வேலைக்காக சவுதி அரேபியா சென்றேன். அங்கு நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, மெதினா விமான நிலையத்தில் துப்புரவுப் பணி வழங்கப்பட்டது.

எனக்கு வேலை கொடுத்த நிறுவனமே பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டது. தினமும் கடுமையாக வேலை வாங்கினர். அதனால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட நினைத்தேன். அதற்கு ஏற்றார் போல், அன்றைக்கு ஜெய்ப்பூர் செல்லும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கழிவறையில் ஒளிந்து கொண்டேன். விமானம் பறந்த பின்னரே நான் கழிவறையில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு உசேன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *