ஐதராபாத் : தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள், தங்கள் பணிகளை செய்ய மறுப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற “பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் ஒருவார காலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதற்கு ஆந்திராவின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது. இதனால், தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்தது.”தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும்’ என, வலியுறுத்தி, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் 13 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.அமைச்சரவை கூட்டங்கள், ஆவணங்கள் சரிபார்த்தல், திட்டங்களை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திடுவது போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடாமல், இவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனால், கடந்த சில வாரங்களாக மாநில அரசு நிர்வாகம் செயல்படாமல் ஸ்தம்பித்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் கூட நடக்காத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவரும், மாநில உணவு வழங்கல் துறை அமைச்சருமான கிருஷ்ணா ராவ் கூறுகையில், “தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும். அதுவரை அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்க போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளோம். எங்களின் பிரச்னைகளை கட்சி மேலிடத்திடம் தெரிவித்து விட்டோம். விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என, நம்புகிறோம்’என்றார்.
இன்று “பந்த்’ : அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற “பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமைதியான வழியில் போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக் குழு கூறியிருந்தாலும், வன்முறை வெடிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் ஒரு வார காலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 கம்பெனி துணை ராணுவப் படையுடன், தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. ஐதரபாத், உஸ்மானியா பல்கலை மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்கும்படி பொதுமக்களுக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ஆட்சி? தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களும், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களுமான நாகம் ஜனார்த்தன ரெட்டி, நரசிம்மலு, தேவேந்தர் கவுடு உள்ளிட்டோர் நேற்று ஐதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆந்திராவில் அரசு இயந்திரம் செயல்படுகிறதா, இல்லையா என்பதை முதல்வர் ரோசய்யா தெளிவுபடுத்த வேண்டும். புதிதாக கவர்னர் பதவியை ஏற்றுள்ள நரசிம்மன், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன் காரணமாக, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply